
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இதனால் கொழும்பு அரசியலில் கொதி நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூப்பிக்காத வரையில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அறிவித்திருந்தார்.
இது மைத்திரி - மகிந்த தரப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இதனால் கோபமடைந்துள்ள மைத்திரி - மகிந்த தரப்பினர் சபாநாயகரை பகிரங்கமாக அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதனால் கொழும்பு அரசியல் மேலும் பரபரப்படைந்துள்ளது.
அந்த வகையில், மகிந்த ராஜபக்சவை பிரதமராக அங்கீகரிக்காவிட்டால் சபாநாயகர் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
அதேபோன்று ஜனாதிபதியின் உத்தரவை மீறி நாடாளுமன்றதைக் கூட்டினால், சபாநாயகர் சிறைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
அதேநேரம், ஜனாதிபதியின் அரச வர்த்தமானிக்கு எதிராக சபாநாயகர் செயற்படுவாராக இருந்தால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.
அமைச்சர்களான சரத் அமுனுகம, விஜயதாச ராஜபக்ச, மகிந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.