வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிலுள்ள ஆறாயிரம் ஏக்கர் காணி இராணுவத்தினரின் தேவைக்கு என பிரதேச செயலாளரிடம் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்குவதில்லை என வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மீள் குடியேற்றம் தொடர்பான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மீள் குடியேற்ற அமைச்சின் உயரதிகாரிகளுடனான கூட்டத்தில் மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது என்றுவடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த வாரம் வவுனியா மாவட்ட செயலகத்தில் சிதம்பரபுரம், பூந்தோட்டம் நலன்புரி நிலையங்களிலுள்ள குடும்பங்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது.
அதில் வடக்கு மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் சார்பில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரால் மெனிக்பாம் பகுதியில் ஆறாயிரம் ஏக்கர் காணி இராணுவத்தினரின் தேவைக்கு சுவீகரிக்கப்படவுள்ளமை பற்றித் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்துதெரிவித்த மத்திய மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சினி நடராஜபிள்ளை புதிதாக இராணுவத் தேவைக்கு காணி வழங்குவது பொருத்தமற்றதென்றும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சால் அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். என்றுள்ளது.