சிறப்பு கட்டுரைகள் >> தமிழர் தீர்வு குறித்து 19 இல் ஏதுமில்லை

essay தமிழ் மக்களை நீண்ட காலமாகப் பாதித்து வரும் தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவது பற்றியோ, தமிழ் மக்கள் எதிர்நோக்கும்
தமிழ் மக்களை நீண்ட காலமாகப் பாதித்து வரும் தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவது பற்றியோ, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றியோ, இந்தத் திருத்தம் முறையாக எந்த ஒரு கருத்தையும் முன்வைக்காத போதிலும்கூட, அத்தகைய முடிவுகளை எட்டுவதற்கான அடித்தளத்தை இது உருவாக்கும் என நான் எதிர் பார்க்கின்றேன் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
 
அரசமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
 
அதாவது 18 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், செயலிழக்கச் செய்யப்பட்ட ஜனநாயக விழுமி யங்கள், இதன் மூலம் மீண்டும் உயிர்பெறும். இந்த வாய்ப்பானது எமது பிரச்சினைகளை நியாயபூர்வமாக அணுகப்பட்டு தீர்க்கப்படுவதற்கான ஒரு புறச்சூழலை உருவாக்க முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும். 
 
கடந்த காலங்களில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முயற்சிகளை மேற்கொள்ளும் போது ஐக்கிய தேசியக் கட்சி அதை எதிர்த்து முறியடிப்பதும், ஐ.தே.கட்சியின் முயற்சிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முறியடிப்பதுமான, ஒரு கிளித் தட்டு விளையாட்டே வரலாறாக இருந்து வந்துள்ளது. 
 
குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய வேண்டத்தகாத நடைமுறைகள் இந்த நாட்டில் எத்தகைய பேரழிவுகளை ஏற்படுத்தின என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.
 
நல்லிணக்கத்துக்கு 
அரிய வாய்ப்பு
 
ஆனால் இன்று இரு பெரிய கட்சிகளும் ஒன்றிணைந்து, ஒரு நல்லாட்சிக்கான ஒரு தேசிய அரசை ஏற்படுத்தியுள்ளன. இது இனப்பிரச்சினைக்கு நியாயமான, நிரந்தரமான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு, இனங்களுக்கு இடையேயான உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கிட்டியுள்ள அரிய வாய்ப்பாகும். 
 
அப்படியான எதிர்பார்ப்புடனேயே தமிழ் மக்கள் நல்லாட்சிக்கான தமது பேராதரவை நிபந்தனைகள் இன்றி வழங்கியிருக்கின்றனர். எனவே ஜனாதிபதியும், பிரதமரும் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான நியாயமான, நிரந்தரமான, தீர்வை எட்ட ஆக்கபூர்வமான முயற்சிகளில் இறங்கவேண்டும். 
 
இந்த ஆட்சியை ஏற்படுத்துவதில் நாம் காத்திரமான பங்கை வகித்தவர்கள் என்ற அடிப்படையில் அப்படி வலியுறுத்த எமக்கு உரிமை உண்டு.
 
எமது மக்களின்
அன்றாடப் பிரச்சினை
 
அதேவேளை, உடனடிக் கவனம் செலுத்தித் தீர்க்கப்பட வேண்டிய, மீள் குடியேற்றப் பிரச்சினை, பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, காணாமற்போனோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு - கிழக்கில் நிலவும் இராணுவத் தலையீடு என்பன எம்முன்னே புரையோடிப்போன பிரச்சினைகளாக நிலைகொண்டுள்ளன.  
 
இப் பிரச்சினைகளில் அரசின் வாக்குறு திகளுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே, பெரிய இடைவெளிகள் இருப்பதை நான் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. 
 
அமைச் சரவை முடிவுகளை நடைமுறைப் படுத்துவதில் கூட படையினர் தடைகளைப் போடும் அதிகாரங்களைக் கொண்டுள்ளனரா என்ற கேள்வி எம்மிடையே எழும் நிலைமை தோன்றியுள்ளது.
 
ராணுவத் தளபதியின்
கூற்றில் சந்தேகம்
அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா, காணிகளை மக்களுக்கு வழங்கு வதற்காக எந்த ஓர் இராணுவ முகாமும் வடபகுதியில் அகற்றப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார். 
 
வலிகாமம் வடக்கில் முதல் கட்டமாக 1000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியிருந்தது. ஆனால், ஜனாதிபதி, பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்ட மீளளிப்பு வைபவத்தின்போது 400 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டன. ஏனைய காணிகள் புதிதாக வேலியிடப்பட்டு, அங்கு இராணுவ நிலைகள் அமைக்கப்படுகின்றன. இப்படியான நிலையில் இராணுவத் தளபதியின் கூற்று ஏனைய காணிகள் விடுவிக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
 
இராணுவத்துக்கு, எங்கு காணிகளை வழங்குவது, மக்களின் சொந்தக் காணிகளில் எவற்றை விடுவிப்பது என்பதனைத் தீர்மானிப்பது அரசு. அதாவது அத்தகைய நடவடிக்கைகள் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமையக் காணி அமைச்சராலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். மேலும் 13 ஆவது அரசமைப்புச் சட்டத்தின்படி அரசும் கூட, மாகாண சபையின் எல்லைக்குள் உள்ள காணிகளை மாகாண சபையின் சம்மதமின்றிக் கையகப்படுத்த முடியாது. 
 
இப்படியான ஒரு நிலையிலும் கூட இராணுவத் தளபதி மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளை வழங்குவதற்காக, இராணுவ முன்னரங்குகளை அகற்ற முடியாது என்று தெரிவித்திருப்பது அப்பட்டமான சிவில் நிர்வாகத்தின் மீதான இராணுவத் தலையீடாகும்.
 
மக்கள் நிலங்களில்
உல்லாச விடுதிகள்
இன்று வலிவடக்கில் 6,300 ஏக்கர் நிலம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவை மக்கள் குடியிருப்புக்கள், விளை நிலங்கள், மீன்பிடிமையங்கள் அமைந்திருந்த பகுதிகளாகும். 
 
இந்தப் பிரதேசம் விவசாய உற்பத்தியிலும், கடல் உணவு உற்பத்தியிலும், எமது நாட்டுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய ஓர் இடமாகும். இது இராணுவத்தினரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. அங்கு இராணுவ முகாம் மட்டுமல்ல உல்லாச விடுதிகள், விளையாட்டு இடங்கள், விவசாயப் பண்ணைகள் என்பன படையினரால் அமைக்கப் பட்டுள்ளன. மீன்பிடித் துறைமுகங்கள் கடற்படையினர்வசம் உள்ளன.
 
இப்பிரதேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு என்பது எமதுநிலங்களைப் பறிப்பது மட்டுமல்ல எமது மக்களின் பொதுவான வாழ்வை அழிப்ப துமாகும். எனவே எமது மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான பிரச்சினைகளை இராணுவம் தீர்மானிப்பதோ அல்லது இராணுவத்தினரின் விருப்புக்கு ஏற்ப அரசு முடிவெடுப்பதோ என்ற நிலை முற்றாக மாற்றப்பட வேண்டும்.
 
எமது மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் வழங்கப்பட்டு, நல்லாட்சியின் தாற்பரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என நான் அரசிடம் இந்தச் சபையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
 
 
காணிகளை விடுவியுங்கள்
இவ்வாறு எமது மக்களின் சொந்த நிலங்கள் சம்பூர், வன்னி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலும் அரசபடை அணியினராலும், தொல்பொருள் திணைக்களத்தாலும், வனப்பரிபாலன துறையாலும், மாகாவலி அபிவிருத்திச் சபையாலும், சிங்கள விவசாயிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 
 
இக்காணிகளை எமது மக்களுக்கு மீண்டும் வழங்கப்படும் போதே, இந்த நாட் டில் நீதியும் நியாயமும் நிலை நாட் டப்படுகிறது என்ற நம்பிக்கை பிறக்க முடியும். 
 
ஒரு மனிதனின் பாரம்பரிய வாழிடம் என்பது நில உரிமை என்ற எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அவனது தொழில் சார்ந்த பொருளாதார வாழ்வு, சொந்தங்களுடன் கூடிவாழும், சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள் உள்ளிட்ட கலாசார வாழ்வில்  தாய் மொழி போன்ற ஒருதேசிய இனத்தின் தனித்துவமான அம்சங்களுடன் இரண்டறக் கலந்துள்ளது.
 
எனவே, ஒருவன் தனது சொந்த வாழிடத்தில் இருந்து தூக்கிவீசப் படும்போது அவனது தேசிய இனத்துவமே ஆட்டம் காணும் நிலை உருவாகின்றது. இதன் விளைவு ஓர் ஊரில், சமூகத்துள் உருவாகி முழுநாட்டுக்குமே ஆபத்தாகப் பேராபத்தை ஏற்படுத்தலாம்.
       
போர் முடிந்தும் இயல்பு வாழ்வு
திரும்பவில்லை
மீள் குடியேற்றம் செய்யப்படாத மக்கள் இத்தகைய பாதிப்புக்களை எதிர்கொள்ளும் அதேவேளையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களும்கூட போர் முடிந்து 6 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் இயல்பு வாழ்வுக்கே திரும்பவில்லை என்பதும் உணரப்பட வேண்டும்.  
 
வாழ்வாதாரம், குடியிருப்பு, கல்வி, போக்குவரத்து வசதிகள் என ஒவ்வொரு விடயங்களிலும் இன்னல்களை அனுபவிக்கும் நிலையும், எமது குறைந்த பட்சத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாத நிலையும் நிலவுகிறது. குறிப்பாகப் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கும், பாலியல் தொந்தரவுக்கும் ஆளாகவேண்டிய நிலை உள்ளது. எனினும் இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் பிச்சைக்காரருக்கு ஒரு ரூபா வழங்கும் வகையில் இல்லாமல்,  அவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கின்றேன்.
 
 
அமைச்சர் சஜித்தின்
கவனத்துக்கு
 
இவ்விடத்தில் இந்திய வீட்டுத்திட்டம் பற்றி ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது என நினைக்கின்றேன். அவர்கள் வழங்கும் வரைபடத்துக்கு அமைய ஒரு வீட்டை நிர்மாணிக்க ஏழரை இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. 
 
ஆனால் பயனாளிகளுக்குப் பகுதி பகுதியாக ஐந்தரை இலட்சம் ரூபாவே வழங்கப்படுகிறது.
 
போரினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து நிற்கும் மக்கள் இந்த மேலதிக ரண்டு இலட்சம் ரூபாவுக்கு எங்கே போவார்கள்? இதன் காரணமாக பல வீடுகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் முடங்கிக்கிடக்கின்றன. 
 
முற்றுமுழுதான சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வரும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸா இது தொடர்பாக ஒரு மாற்று நடவடிக்கையை மேற்கொண்டு இந்தத் திட்டத்தால் மக்கள் பயனடையும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
 
காணாமற்போனோர்
நிலைமை என்ன?
காணாமற்போனோர் விவகாரம் தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே உள்ளது. ஒருபுறம் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகளை நடத்திக்கொண்டிருக்க, மறுபுறத்தில் பிரதமர் நாட்டில் இரகசிய முகாம்கள் எதுவும் இல்லை எனவும், அப்படி எவரும் அநியாயமாகத் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 
 
அப்படியானால் காணாமற் போனோர் எங்கே? அப்படி அவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்றால் ஏன் ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறுகின்றன. 
 
உயிருடன் இராணுவத்தினரிடம் தங்கள் குடும்பங்களால் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? எங்கள் கலாசார முறைப்படி கணவனை இழந்த பெண்கள் தாலி அணிவது மில்லை. நெற்றியில் பொட்டுவைப்பதுமில்லை. இப்போது 6 வருடங்களாக எமது பெண்கள் தாலியை அணிவதா? விடுவதா, பொட்டுவைப்பதா அழிப்பதா? என்று தெரியாமல் திண்டாடி வருகின்றனர். 
 
எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பயனுமில்லை. காணாமற்போனோர் தொடர்பான விசாரணைக்குழு எமது மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஓர் ஆயுதமாகவே கடந்த அரசால் பயன்படுத்தப்பட்டது. அந்தநிலை மேலும் தொடருமானால் இது நல்லாட்சியின் அர்த்தத்தையே மாற்றிவிடும். 
 
எனவே உடனடியாக இது வரை நடந்த விசாரணைகளின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். 
 
காணாமற்போனோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பதை வெளிப்படுத்த வேண்டும். 
 
சட்டமா அதிபர் திணைக்களம் 
நீண்ட துயிலில் 
 
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பலநூறு பேர் இன்னமும் சிறையில் வாடுகின்றனர். சிலர் 15 வருடங்களுக்கு மேலாக விசாரணைகள் இன்றித் தடுத்துவைக்கப் பட்டுள்ளனர். 
 
அவர்களில் சிலர் சிறையிலேயே கொல்லப்பட்டும் விட்டனர். அவர்கள் விசாரணை செய்யப்பட்டு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும், ஏனையோர் விடுவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.  
 
இவை கடந்த அரசின் காலத்தில் இருந்து இன்று வரைக்கும் கேட்டுக்கேட்டுப் புளித்துப் போன வார்த்தைகள். இவர்கள் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக் களம் நீண்ட துயிலில் ஆழ்ந்துவிட்டதோ என்ற சந்தேகமே எமக்கு எழுகின்றது.
 
போரின் தளபதியாகத் தலைமை தாங்கி வழி நடத்தியவர்கள், வேறும் பல குற்றங்கள் புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அமைச்சுப் பதவிகள், முதலமைச்சர் பதவிகள் என ஆட்சியில் பதவிகளையும் வழங்கினீர்கள். 
 
இப்படியான பெருங்குற்றங்களை இழைத்தவர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக நடமாடவும், அரசில் உயர் பதவிகளையும் வகிக்க முடிகிறது. ஆனால் அவர்களின் கட்டளைகளுக்கு அமையச் செயற்பட்டவர்கள், அவர்களுக்கு உணவு கொடுத்தவர்கள், அவர்களுக்கு தங்க இடம் கொடுத்தவர்கள் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 
 
இதுவா இந்த நாட்டின் நீதி? இது ஒரு நல்லாட்சிக்குப் பொருத்தமானது எனக் கூறமுடியுமா?
 
எனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட வேண்டும். 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி உறுப்பினர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமையை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 
 
அவர்களுக்கு அப்படியயாரு பொதுமன்னிப்பு வழங்க முடியுமானால், தமிழ்க் கைதிகளுக்கு ஏன் அப்படி ஒரு பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது? நீதி அமைச்சர் எந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நியாயங்களை நிலைநாட்டுவதில் உறுதியுடன் செயற்படுபவர் என்ற வகையில், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி, அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.
 
இங்கு சமர்ப்பிக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டம், மூலம் நாட்டில் ஜனநாயகச் சூழலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வுகளை எட்டநாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila