மகேஸ்வரிநிதியம் ஒரு கோடியே 98 இலட்சம் ரூபாவை வழங்க வேண்டும்; பாரவூர்தி சங்கம்


news
மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பாரவூர்தி சங்கத்தினர் இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் அங்கத்துவர்களுக்கான பணத்தினை வழங்குவதாக மகேஸ்வரிநிதியத்தினர் அழைப்பு விடுத்தால்  அங்கத்தவர்கள் பணத்தினை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தலைவர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
கோண்டாவிலில் அமைந்துள்ள பாரவூர்தி சங்கத்தின்  அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
1143 அங்கத்துவர்களைக் கொண்ட பாரவூர்தி சங்கத்தில் 700ற்கும் மேற்பட்டவர்கள் அங்கத்துவ பணம் 5ஆயிரம் ரூபாவையும் கூலிக்காசாக 300 ரூபாவினையும் செலுத்தியுள்ளனர். 
 
தற்போது மணல் ஏற்றுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த அங்கத்துவ பணம் உள்ளிட்டவற்றை திருப்பி செலுத்துமாறு மகேஸ்வரி நிதியத்தை நீண்ட காலமாக கேட்டு வருகின்றோம்.
 
பாரவூர்தி சங்கத்திடம் 575 அங்கத்துவர்கள் மாத்திரமே தங்களுடைய பணத்தைப் பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர். மிகுதி அங்கத்தவர்களுக்கும்  அறிவித்திருந்தோம் . ஆனால் அவர்கள் இதுவரை பதிவுகளை மேற்கொள்ளவில்லை.
 
575 அங்கத்துவர்களுக்குமாக மகேஸ்வரி நிதியத்தினால் ஒரு கோடியே 98 இலட்சம் ரூபா வழங்கப்பட வேண்டும். 
 
பல தடவைகள்  கடிதம் மூலம் அறிவித்தோம் , போராட்டங்களை மேற்கொண்டோம், முன்னாள் அமைச்சருக்கு அறிவித்தோம் நாங்கள் வழங்கிய பணத்தை தருவதாக கூறுகின்றனரே தவிர இதுவரை தரவில்லை. 
 
இன்று மணல் ஏற்ற முடியாது. இதனால் எமது தொழிலாளர்கள் பெரிதும் பொருளாதார ரீதியில் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மகேஸ்வரி நிதியமும்  பணத்தை தராது இழுத்தடித்து வருகின்றமை பெரும்  நெருக்கடிக்குள்  கொண்டுபோய் விட்டுள்ளது.  
 
மகேஸ்வரி நிதியத்தின்  செயற்பாடு தொடர்பில் அரச அதிபருக்கு தெரியப்படுத்தியதுடன் அவரூடாக வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவுக்கும்  தெரிவித்திருந்தோம். அதனடிப்படையில் கடந்த முதலாம் திகதி முதல் அங்கத்துவர்களை அழைத்து அவர்களுக்கான பணத்தை வழங்குவதாக ஆளுநர் முன்னிலையில் மகேஸ்வரி நிதியத்தின் தலைவர் ரஜீவன் உறுதியளித்திருந்தார். 
 
அதற்கமைய அன்றையதினம்  அங்கத்தவர்கள் மகேஸ்வரி நிதியத்திற்குச் சென்ற போது பொறுப்புவாய்ந்தவர்கள் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டனர். அதன்பின்னர் எந்த நடவடிக்கையினையும்  எடுக்கவில்லை.  
 
இவ்வாறான செயற்பாட்டை அடுத்து சட்டத்தரணி சுமந்திரனை நாடி அவரூடாக நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஊழல் மோசடி என்ற முறைப்பாட்டினையும் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக பதிவு செய்துள்ளோம்.  
 
இதில் எமக்கு எவ்வித அரசியல் பின்னணியோ கிடையாது. முற்றுமுழுதாக அங்கத்தவர்களின் பணத்தை பெற்றுக் கொள்வதே. எங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை மகேஸ்வரி நிதியம் தராதவிடத்து நாங்கள் எங்கு செல்வதற்கும்  தயாராக உள்ளோம். 
 
முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் இன்று அங்கத்துவர் ஒருவருக்கு தொலைபேசியில் மகேஸ்வரிநிதியத்திலிருந்து பேசுகின்றோம். நீங்கள் வந்தால் பணத்தைப் பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  
 
எனினும்  தற்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் தன்னிச்சையான முடிவுகளை எங்களால் எடுக்க முடியாது.  எனவே மகேஸ்வரிநிதியத்தினர் எழுத்துமூலம்  அங்கத்துவர்களின் பணத்தை வழங்க தாங்கள் தயாராக இருப்பதாக அறிவிக்கும்  பட்சத்தில் அவற்றை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தி அவர்களது ஆலோசனைக்கு அமையவே செயற்படுவோம். 
 
எனவே இவ்வாறு அங்கத்துவர்களுக்கு மகேஸ்வரி நிதியத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்படடால் சங்கத்திற்கு உடனடியாக அறிவிக்க வேண்டுமே தவிர பணத்தை பெற வேண்டாம் என்றும்  தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila