நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா றவிராஜின் கொலையோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதும், கொலைக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டதும் கடந்த பல வாரங்களின் பரபரப்பு செய்திகள்..
உண்மையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசன் ஆகியோரது கொலைகள் திடீரென இடம்பெற்ற கொலைகளோ, தற்செயலாக நடைபெற்றதோ அன்றி தனிநபர் முரண்பாட்டு, அல்லது தனிப்பட்ட கொலைகளோ அல்ல.
இவை யாவும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பிக்கும் போதே வகுக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் யுத்த மூலோயங்களின் ஒரு பகுதி என்பது எனது நோக்கு....
இலங்கையில் 2002ல் ஆரம்பிக்கப்பட்ட சமாதான யுத்தம் 2005ன் இறுதிப்பகுதியில் முடிவுக்கு வர விடுதலைப் புலிகளால் யதார்த்தவாதி என கூறப்பட்டு, ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ஸ, சமாதானத்தின் முறிவில் ஆயுதப் போரை ஆரம்பித்து இருந்தார்...
புலிகளுக்கு எதிரான இந்த ஆயுதப்போரை ராஜபக்ஸ சகோதரர்கள் மற்றும் சரத்பொன்சேகா கூட்டணி முன்னொருபோதும் இல்லாதவாறு நன்கு திட்டமிட்டு ஆரம்பித்திருந்தனர்...
ராஜபக்ஸக்களுக்கு முந்தைய அரசாங்கங்கள், புலிகளுக்கு எதிரான ஆயுத யுத்தத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளித்திருந்தன... ஆனால் ராஜபக்ஸக்கள் ஆயுத போரால் மட்டும் புலிகளை ஒடுக்கமுடியாது என்பதனை உணர்ந்திருந்தனர்...
அதனால் முதலில் தமது புலனாய்வுக் கட்டமைப்பில் உள்ள துவாரங்களை அடைத்து மிகப்பலம் பொருந்திய புலனாய்வுக் கட்டமைப்பை மேஜர் ஜென்றல் கப்பில கெந்தவிதாரண தலமையில் ஏற்படுத்தினர்....
தவிரவும் யுத்த தந்திரம் நடைமுறைத் தந்திரம் தொடர்பில் புலமைசார் நிபுணர்களின் பலமான ஆலோசனைகளை பெற்றிருந்தனர்... இந்த ஆலோசனைகள் சர்வதேச நாடுகளிடம் இருந்தும் பெறப்பட்டன....
அவற்றின் அடிப்படையில் மகிந்த – கோத்தா – சரத் பொன்சோகா இணைந்த மும்மூர்த்திகள் வகுத்த மூலோபாயத் திட்டங்கள் பல... அவற்றில், நான் அறிந்த அல்லது எனக்கு தெரிந்த - இங்கு நான் சொல்லப்போகும் திட்டங்களும் ஒரு பகுதியாகின்றன...
அதில் முதலாவது, தமிழீழ விடுதலைப் புலிகளையும், அவர்களின் போராட்டத்தையும், தெற்கிலும் சர்வதேசத்திலும் நியாயப்படுத்தும் அரசியல் தலைவர்களை கட்டுப்படுத்துவது முடியாவிடின் அவர்களை இல்லாது செய்வது.
இரண்டாவதாக தமிழீழ விடுதலைப் புலிகளுகளின் போராட்டம், தாக்குதல்கள், மக்களின் அவலங்கள், படையினரின் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றை உடனுக்குடன் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் வெளிப்படுத்தி அரசாங்கத்திற்கு சங்கடங்களை ஏற்படுத்தும் தமிழ் ஊடகங்களை அடக்குவது...
மூன்றாவது விடுதலைப் புலிகளுக்கான விநியோகப் பாதைகளை முடக்குவது... இதில் மிக முக்கியமானது, வெளிநாடுகளில் இருந்து கொழும்பின் ஊடாக, வடக்கிற்கும் கிழக்கிற்கும் பணம் செல்லும் வழிகளையும் - அதனை செயற்படுத்தும் முகவர்களையும் இல்லாது ஒழித்தல்...
நான்காவது விடுதலைப் புலிகளின் முகவர்களாக இருந்து, அவர்களின் முதலீடுகள், போக்குவரத்து நடவடிக்கைகளை செயற்படுத்துபவர்கள் - மற்றும் தெற்கில் புலிகளுக்காக வேவு பார்பவர்கள், தகவல்களை பரிமாறுபவர்கள், தாக்குதல்களுக்கு உதவுபவர்களுக்கு பணப் பரிமாற்றத்தை செய்பவர்கள் உள்ளிட்டோரை அழித்தல்;.....
ஐந்தாவது இலங்கையின் ஆயுதப் படைகளில் பணிபுரிந்தவாறு புலிகளிடம் பணம் பெற்று அவர்களுக்காக பணியாற்றிய பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை கொலை செய்தல்...
ஆறாவது புலிகளுடன் தொடர்புகளை பேணிய தெற்கின் பாதாள உலக ஜாம்பவான்களை இல்லாது ஒழித்தல்....
ஏழாவது இவவ்வாறான நடவடிக்கைகள் மூலம் வடக்கு கிழக்கிற்கு வெளியேயான புலிகளின் பலமான வலைப்பின்னலை முதலில் தகர்த்தெறிவது....
முதலான மூலோபாயத் திட்டங்களின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஸ, முன்னாள் புலனாய்வுப் பிரதானி கப்பில ஹெந்தவிதாரண மற்றும் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா உள்ளிட்டோர் புலிகளுக்கு எதிரான போரை ஆரம்பித்தனர்....
காத்திருங்கள் தொடரும்......