தேர்தல் சுவரொட்டிகள் பேருந்துகள் மீது ஓட்டப்பட்டிருந்தால் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் எச்சரித்துள்ளார்.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் சாரதிகள் , நடத்துனர்கள் , போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் பேருந்து நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன அவற்றை பொலிசார் அகற்றி வருகின்றார்கள்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல பேருந்துக்களில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பதனை அவதானித்துள்ளேன்.
அவ்வாறு சுவரொட்டிகள் ஓட்டுவது சட்ட விதிமுறை மீறல் ஆகும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனவே பேருந்துக்களில் ஒட்டப்பட்டு உள்ள அனைத்து சுவரொட்டிகளும் அகற்றப்பட வேண்டும்.
இனி தேர்தல் சுவரொட்டிகள் பேருந்தில் ஒட்டப்பட்டு இருந்தால், அந்த பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் மத்திய பஸ் நிலையத்திற்குள் சுவரொட்டி ஒட்டப்பட்டால் அதற்கு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
அதவேளை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்களில் ஒட்டபட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுமாறு யாழ்,தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளருக்கு கடிதம் மூலம் இரண்டு தடவைகள் அறிவிக்கபப்ட்டதாகவும் தெரிய வருகின்றது.