தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவிற்கும் எந்தவித தொடர்பும் இருந்திருக்கவில்லை என்று அவரது பாரியார் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது கணவரை கடத்தியவர்களுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையை புரிந்தவர்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசுவாசிகளாக செயற்படுகின்ற ஊடகங்களும், சிலரும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதில் துளியளவேணும் உண்மை இல்லை.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க, எக்னலிகொடவின் கடத்தலுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவரும் இராணுவ சிப்பாய்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். எனினும் அதற்கு ஜனாதிபதி தடை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் இவ்வாறான முயற்சிகளுக்கு வேலியிடுவார் என நம்புகின்றேன்.
கடத்தல் இடம்பெற்ற பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அனுமதி கோரியிருந்த போதிலும் அதற்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே இன்று நீதிமன்றம் மீதும் நம்பிக்கையற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலைக்கு ஆயுதம் விநியோகித்தவர்களுக்கும், பிரகீத் எக்னலிகொடவை கடத்தியவர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக தெரிவிக்கின்றேன். எனவே இவர்கள் தொடர்பான தகவல்களை உடன் வெளிகொணர பிரதமர், ஜனாதிபதி உதவிபுரிய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.
Add Comments