இலங்கையைக் கைவிட்டதா அமெரிக்கா?

இலங்கையில் 2002ம் ஆண்டு தொடக்கம், 2011ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரித்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம், கலப்பு விசேட நீதிமன்றத்தை உருவாக்கும் மிக முக்கியமான பரிந்துரையை முன்வைத்துள்ளது.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் அரசாங்கத்தை தடுமாற வைத்துள்ளதாகவே தெரிகின்றது..
காரணம், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஊக்குவிக்கும், ஒரு பரிந்துரையைத் தான் இந்த விசாரணை அறிக்கை முன்வைக்கும் என்று அரசாங்கம் பெரிதும் நம்பியிருந்தது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் நிலைமையில் இருந்து, தாம் மாறி விட்டதாகவும், புதிய சூழ்நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச சமூகத்தை நம்ப வைக்க முயன்றது இலங்கையின் இப்போதைய அரசாங்கம்.
அமெரிக்காவின் தேவைகளை ஈடு செய்யும், அதன் நலன்களை உறுதிப்படுத்தும் அரசாங்கமாக தாம் மாறியிருப்பதால், உள்நாட்டு விசாரணைக்கே ஐ.நா. விசாரணை அறிக்கை பரிந்துரைக்கும் என்று வெகுவாக நம்பியது அரசாங்கம்.
இந்த அறிக்கை வெளிவர முன்னரே, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டது அமெரிக்கா.
அதற்கு ஆதரவாக ஜெனீவாவில் அடுத்த தீர்மானத்தைக் கொண்டு வரப் போவதாகவும் அது அறிவித்தது.
இவையெல்லாம் அரசாங்கத்துக்கு இன்னும் அதிகமான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.
அதேவேளை, இந்த விடயங்கள், தமிழர் தரப்புக்கு இந்த அறிக்கை மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை.
உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழு பரிந்துரைத்தால், தமக்கான நீதி கிடைக்காமலேயே போய் விடும் என்று தமிழர் தரப்பும் நினைத்தது.
இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று, இந்த அறிக்கை உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தவில்லை.
உள்நாட்டு விசாரணை நம்பகமானதாக நிகழ்வதற்குச் சாத்தியமில்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
இன்னொரு பக்கம், தமிழர் தரப்பு பயந்த மாதிரி உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தவும் இல்லை, அவர்கள் எதிர்பார்த்தது போன்று சர்வதேச விசாரணையை பரிந்துரைக்கவும் இல்லை.
இரண்டுக்கும் நடுவே, உள்ள கலப்பு நீதிமன்றத்தையே பரிந்துரைத்திருக்கிறது ஐ.நா. விசாரணைக் குழு.
இது தமிழர் தரப்பை பெரிய வெற்றியாக கொண்டாட வைக்காவிடினும், ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேவேளை, அரசாங்கத் தரப்பை அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.
ஐ.நா. விசாரணை அறிக்கையில் இருந்து அமெரிக்கா தம்மை முற்றுமுழுதாக காப்பாற்றும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திடம் இருந்தது.
மஹிந்த ராஜபக்ச அரசின் கொள்கையை தாம் மாற்றியமைத்துள்ளதன் மூலம், ஐ.நா. விசாரணை அறிக்கையை முற்றாக மாற்றியமைத்து விடலாம் என்று அரசாங்கம் கருதியது போலும்.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஐ.நா. விசாரணை அறிக்கையில், இலங்கை அரசாங்கத்துக்குச் சார்பான சில மாற்றங்கள் செய்யப்பட்டதான தகவல்களும் உள்ளன.
குறிப்பாக, போர்க்குற்ற விசாரணையை எதிர்நோக்க வேண்டியவர்களின் பட்டியல் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றியதால், ஐ.நா. அறிக்கையில் மாற்றம் செய்ய முடிந்துள்ளதாகவும், போர்க்குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தவர்களின் பெயர்ப் பட்டியல் நீக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், போர்க்குற்றவாளிகளின் பெயர்களை தமது அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அறிக்கையில் இருந்து நீக்க முடிந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச  மற்றும் 40 வரையான படை அதிகாரிகள் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதனை மஹிந்த ராஜபக்ச தரப்பினர் தமது தேர்தல் பிரசாரங்களுக்கும் பயன்படுத்தியிருந்தனர். ஆனால், அவ்வாறு எவருடைய பெயரும் விசாரணை அறிக்கையில் இடம்பெறவில்லை.
இது மனித உரிமைகள் விசாரணையே தவிர, குற்றவியல் விசாரணை அல்ல என்றும், குற்றவாளிகளின் பெயர்களை ஐ.நா. வெளியிடாது என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கூறியிருக்கிறார்.
அதேவேளை, வெள்ளைக்கொடி விவகாரத்தில் தொடர்புடைய, பாலித கொஹன்ன, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டோரின் பெயர்கள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸும் கூறியுள்ளது.
எனவே, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்ட சில விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அதற்கான வாய்ப்புகளை முற்றிலும் நிராகரிக்க முடியாது.
ஆனாலும், இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று உள்நாட்டு விசாரணை அறிக்கையை பரிந்துரைக்கும் அளவுக்கு, மாற்றங்கள் செய்யப்படவில்லை.
இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக கூறிய அமெரிக்கா, எதற்காக, ஐ.நா. அறிக்கையில் அதற்குச் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முனையவில்லை என்ற கேள்வி வரலாம்.
அப்படி, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மூலமே, குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டால், அது ஒட்டுமொத்த நீதி விசாரணைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும்.
உள்நாட்டு விசாரணையை சர்வதேச சமூகம் ஏற்கலாம், நிராகரிக்கலாம். ஐ.நா. விசாரணைக் குழுவைப் பொறுத்தவரையில் அது முக்கியமல்ல.
அது அவ்வப்போதைய அரசியல், இராஜதந்திரப் புறச்சூழ்நிலையால் தீர்மானிக்கப்படுகின்ற விடயம்.
ஆனால், ஐ.நா. விசாரணை அறிக்கை என்பது ஒரு உயர் மதிப்பார்ந்த ஆவணமாக வரலாறு முழுக்க இருக்கப் போகிறது. அது பொய்யானதாகி விட முடியாது.
இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாள் தமிழர்கள் நியாயம் கோருவதற்கோ பெறுவதற்கோ இந்த ஆவணம் துணை நிற்கும்.
அப்படியான ஒரு ஆவணத்தை தற்காலிக அரசியல் புறச்சூழல்களுக்காக பொய்யானதாக்க அமெரிக்காவோ, ஐ.நாவோ துணைபோக முனைந்திருக்காது.
இரண்டாவது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கப் பரிந்துரைத்தால், இலங்கை அரசாங்கத்தின் தலையில், கனம் ஏறிவிடும்.
எந்த நாடும் உள்நாட்டு விசாரணையில் தலையிடத் தேவையில்லை, எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டுச் சென்று விடுவார்கள்.
அது மேற்குலகின் கட்டுப்பாட்டில் இருந்து இப்போதைய அரசாங்கமும் விடுபட்டுச் சென்று விடும்.
எனவே, தமது பிடியைத் தக்கவைத்துக் கொள்ளவே அமெரிக்காவும் சரி, ஐ.நாவும் சரி, விரும்பியிருக்கும்.
அதனால் தான், உள்நாட்டு விசாரணைக்கு இடமளிக்காமல், அதேவேளை, இலங்கையை ஒரேயடியாக சர்வதேச நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்லாமல், நடுவில் நிறுத்தியிருக்கிறது ஐ.நா.
இந்த கலப்பு நீதிமன்றத்தை அமைக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ள நிலையில், அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதற்கு முதலில், இலங்கை அரசாங்கத்தின் பதில் என்ன என்பது முக்கியமானது.
ஏனென்றால், இலங்கை அரசாங்கம், இந்த விசாரணை அறிக்கையையும் அதன் பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்க நிலைப்பாடு போலத் தெரிகிறது.
அண்மையில் அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, டுவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், ஐ.நா. விசாரணை அறிக்கையை எதிர்க்காமல் இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒருபோதும், ஐ.நா. விசாரணை அறிக்கைகளை ஏற்றுக்கொண்டதில்லை. எப்போதும் நிராகரிப்பதே அதன் வழக்கம்.
இப்போதைய அரசாங்கம் தாம் மஹிந்த ராஜபக் ஷ காலத்துக் கொள்கைகளை கைவிட்டு விட்டதாக கூறுகிறது. தாம் நிலைமையை மாற்றி விட்டதாக கூறுகிறது.
அப்படியிருக்க, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தைப் போலவே எடுத்த எடுப்பில் அறிக்கையை அதனால் நிராகரிக்க முடியாது.
அதேவேளை, கலப்பு நீதிமன்றம் என்ற சிக்கலான, விடயங்களில் அது எவ்வாறு செயற்படப் போகிறது என்ற கேள்வியும் இருக்கிறது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடிகள் குறையும் என்றே பலரும் கருதினர்.
ஆனால், இப்போதைய நிலைமையை கவனிக்கும் எவரும், அவ்வளவு இலகுவாக இந்த சிக்கலில் இருந்து அரசாங்கத்தினால் வெளிவர முடியாது என்றே கூறலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் குறிப்பிட்டது போன்று, “இது முடிவல்ல, இப்போது தான் ஆரம்பமாகியிருக்கிறது.”
-ஹரிகரன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila