மே 18 முள்ளிவாய்க்காலில் நேற்றையதினம் தீபம் ஏற்றி உயிரிழந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிப் போரில் உயிரிழந்த எம் உறவுகளை நினைவு கூருவதென்பது எங்களின் உரிமையும் கடமையுமாகும்.
இருந்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவதை தவிர்த்துக் கொண்டனர்.
முள்ளிவாய்க்காலுக்கு சென்று அஞ்சலி செலுத்தினால் அது அரச மட்டத்துச் செல்வாக்கை குறைத்துவிடும் என்று நினைத்து அவர்கள் முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதை தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றலாம்.
இருந்தும் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடைசெய்ய முடியாது என்று அரசாங்கமே அறிவித்த பின்னர் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று எங்கள் உறவுகளை நினைந்து ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவது உயிரிழந்தவர்களை முன்னிறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற தமிழ் அரசியல் தலைமைகளின் கடமை.
இருந்தும் தமிழ்த் தலைவர்கள் சிலர் முள்ளிவாய்க்கால் பக்கம் செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொண்டதற்கு புலிகள் மீதான ஆத்திரம் காரணமோ என்று எண்ணத் தோன்றும்.
எது எப்படியாயினும் மகிந்த ராஜபக்சவின் தந்தையார் ராஜபக்சவின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தலைவர்கள் முள்ளிவாய்க்காலை ஓரம் கட்டியமை எந்த வகையிலும் நியாயமாகத் தெரியவில்லை.
பரவாயில்லை; கிடைக்கின்ற வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்திலும் இவர்கள் முள்ளிவாய்க்காலை நினைக்காமல் இருந்திருக்கலாம்.
எது எப்படியாயினும் தமிழர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒன்றுபட வேண்டும்.
தமிழர்களின் ஒற்றுமை ஒன்றுதான் அவர்களின் பலமாக இருக்க முடியும். இருந்தும் துரதிர்ஷ்டவசமாக தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் அமைப்புக்களும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒற்றுமையை இழந்து தனித் தனி வழியில் பயணிக்கின்றன.
ஒரு அமைப்பு நல்லதைச் செய்ய நினைத்தால் மற்றைய அமைப்பு அதனை தடுத்து நிறுத்த கடுமையாகப் பாடுபடுகிறது.
பதவி ஆசையும் பெயர், புகழ் விருப்பமும் மேலோங்கி சதிராடுகிறது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுகின்ற வஞ்சகத்தனங்கள் தமிழினம் தழைத்தோங்க முடியாதவாறு வெட்டிச் சரிக் கின்றன.
இத்தகைய நிலைமை தொடர்ந்தால் தமிழினம் தன் இனத்தால் அழிந்த இனம் என்ற கறை படிந்த வரலாற்றை தனதாக்கிக் கொள்ளும்.
ஆகையால்; அன்புக்குரிய தமிழ் அரசியல் தலைமைகளே! தமிழ் அமைப்புக்களே! உங்களிடம் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம்.
அந்தக் கருத்து முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு ஏற்பட்டது என நீங்கள் கருதினால், ஒருகணம் முள்ளிவாய்க்காலை நினையுங்கள்.
முள்ளிவாய்க்கால் உங்கள் மனக்கண்ணில் தெரியுமாயின் தமிழர்கள் ஒற்றுமைப்படுவதில் எந்தத் தடையும் இருக்க முடியாது.
ஆம், முள்ளிவாய்க்கால் ஒன்றுபோதும் தமிழர்கள் ஒன்றுபடவும்; தமிழன் வாழ்ந்து காட்டுவான் என்பதை உறுதிப்படுத்தவும் முள்ளிவாய்க்கால் ஒன்று போதும்.