
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரால் ஐ.நா பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பானன விசாரணை அறிக்கை, இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சபாநாயககர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில், இந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐ.நா அறிக்கை குறித்த விவாதம் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக யுத்தம் நிறைவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட பரணகம மற்றும் உதாலகம தலைமையிலான ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகளையும் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கைகளை வெளியிடுமாறு அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையில், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் குற்றஞ்சுமத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.