ஒருபுறம் தமிழரசுக்கட்சிக்கு கொம்பு தீட்டிக்கொண்டிருக்கின்ற இந்திய உளவு கட்டமைப்பு மறுபுறம் முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜாப்பெருமாளை முழு அளவினில் அரசியலில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து தனது புதுடெல்லியிலுள்ள தனது வீட்டினை சுமார் 160 கோடி விலைக்கு விற்றுள்ள வரதராஜப்பெருமாள் அந்தப்பணத்துடன் வடக்கினில் அரசியல் களத்தினில் குதித்துள்ளார்.
இதனிடையே 1987 முதல் 1990 வரையினில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போகவும் கொல்லப்படவும் பிரதான சூத்திரதாரியாக இருந்த வரதராஜப்பெருமாள் அணி தற்போது இடதுசாரி கொள்கை மற்றும் வலுவற்ற வடமாகாணசபை எனும் கோசங்களுடன் களமிறங்கியுள்ளது.இதற்கான பிரச்சாரங்களிற்கும் ஆட்கள் களமிறக்கபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தினது நேரடி வழிகாட்டலில் அரசியல் பயணத்தை வரதராஜப்பெருமாள் ஆரம்பிக்க முற்பட்டுள்ள போதும் பொதுமக்களிடையே வெறுப்பு மனநிலையுடனேயே இத்தரப்புக்கள் பார்க்கப்படுகின்றன.
மறுபுறம் அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களினில் முன்னைய நண்பனான வரதராஜப்பெருமாளை புறக்கணித்து வந்த போதும் தனது அடுத்த கட்ட அரசியல் பணிகளினில் இணைத்து செயற்பட தற்போது விருப்பம் கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னதாக 2013ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபை தேர்தலில் வரதராஜப்பெருமாள் அணியினையும் இணைத்து செல்ல தமிழரசுக்கட்சிக்கு புதுடெல்லியிலிருந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தது.எனினும் கூட்டமைப்பின் பங்காளிகளுள் ஒருதரப்பாக இருந்த ஈபிஆர்எல்எவ் சுரேஸ்பிறேமச்சந்திரன் எதிர்ப்பு வெளியிட்டதால் அது சாத்தியப்பட்டிருக்கவில்லை.
தற்போது கூட்டமைப்பிலிருந்து சுரேஸ் தரப்பு வெளியேறும் மனோநிலையினில் இருக்கின்ற நிலையினில் மீண்டும் தமிழரசுடன் கூட்டுசேரும் ஆர்வத்தினில் வரதராஜப்பெருமாள் தரப்பு மறுபுறம் மும்முரமாக பேச்சுகளினில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பினில் சுமந்திரன் ஊடாக பேச்சுக்கள் நடப்பதாக தெரியவந்துள்ளது.இதற்கான தரகு நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்திலுள்ள டாண் தொலைக்காட்சியின் பினாமி உரிமையாளரான குகநாதன் என்பவர் மும்முரமாக செயற்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.முன்னாள் பாதுகாப்பு அiமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பினாமியென அடையாளப்படுத்தப்பட்டுள்ள குகநாதன் இம்முயற்சிகளினில் குதித்துள்ளமை முன்னைய மஹிந்த தரப்பின் ஆதரவும் இம்முயற்சிக்குள்ளதாக தெரிகின்றது.
வடக்கு-கிழக்கினை தனது கைகளினுள் வைத்திருக்க இந்திய அரசும் அதன் முகவர்களும் முற்பட்டுள்ள போதும் தமிழ் மக்கள் மனநிலை எதிராகவே உள்ளது.அண்மையினில் நல்லூரினில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல் இந்திய தூதரக மட்டத்தினில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.முடக்கி வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் சார்பு அணிகள் மீளெழும் போக்கு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு கருதுகின்றது.அது தமது நலன்களை கேள்விக்குள்ளாக்குமென அது நம்புகின்றது.
இத்தகைய சூழலிலேயே மீண்டும் வரதராஜப்பெருமாள் அணியினை களமிறக்க மேற்கொள்ளப்படும் சதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.