யார் இந்தப் பிரபாகரன்: பின்னணி என்ன?

முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது,  செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் புதுகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள  ஆவணங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இவரின் பெற்றோர் இலங்கையின் மலையகத் தமிழர். பிரபாகரன் இளவயதிலேயே தமிழகம் வந்து உறவினர்களுடன் வசித்து வருகிறார். இதனால் தமிழகத்தில் நடைபெறும் ஈழத்தமிழர் குறித்த அரசியல் நிகழ்வுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவர் சென்னையில் கோயம்பேடு பகுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அவ்வப்போது சென்னையில் நடைபெறும் தமிழர் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில்,"இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்" என்ற தலைப்பிலான கருத்தரங்கு சென்னை  மியூசிக் அகாடமியில் நடக்க உள்ளதாக வந்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டவாறு தனது முகவரி தொலைபேசி எண் ஆகியவற்றைக் கொடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவும்  செய்துள்ளார்.
அதன்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். கருத்தரங்கில் எம்.கே.நாராயணின் பேச்சை முழுமையாகக் கேட்டுள்ளார். அவர் தனது பேச்சை முடித்து மேடையை விட்டு இறங்கி வருகிறபோது, பிரபாகரன் எம்.கே. நாராயணுக்கு கை கொடுப்பது போல சென்றுள்ளார். அவருக்கு இடது கையை கொடுத்துவிட்டு, வலது கையால், " இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு காரணமே நீதான்...!" என்றபடியே காலில் இருந்த செருப்பைக் கழற்றி கழுத்து, முகம், தலை ஆகிய பகுதிகளில் எம்.கே.நாராயணனை சரமாரியாக அடித்துள்ளார். இந்த தாக்குதலை எதிர்பார்க்காத நாராயணன் அதிர்ச்சியடைந்து, நிலைகுலைந்து போனார்.
இதேவேளை பிரபாகரன் தங்கியிருந்த கோயம்பேடு அறையில், உடன் தங்கி இருந்தவர்களின் விவரம் குறித்து தீவிர விசாரணையில் பொலிசார்  இறங்கினர். அறையின் மேலாளர், உரிமையாளர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிரபாகரன் சென்னையில் எவ்வளவு நாட்களாக தங்கி இருக்கிறார்? அவருக்கு வாடகை அறை பிடித்துக் கொடுத்தது யார்? ம.க.இ.க. போன்ற அமைப்புகளுடன்  தொடர்பு இருக்கிறதா? எந்த அமைப்பின் பின்னணியில் செயல்படுகிறார்? என்பது உள்ளிட்ட கோணங்களில் பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila