காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு நேற்று யாழ்ப்பாணத்தில் தனது விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்போது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காக மரணச்சான்றிதழையும் இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆணைக்குழு அழுத்தம் விடுத்துள்ளது.
இந்த அழுத்தத்தை ஆணைக்குழுவின் தலைவர் மாக்ஸ் வெல் பரணகம உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கியதாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதனை அவர்கள் அனைவரும் நிராகரித்துள்ளதுடன் தமக்கு தமது உறவுகள் மீள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
எத்தனை நாட்களுக்கு இவ்வாறு கஸ்டப்பட்டு அலைந்து திரியப் போகிறீர்கள் என்று தெரிவித்த அவர் உங்கள் உறவுகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டில் உங்கள் வாழ்வு கட்டமைப்பை மேம்படுத்திக்கொள்ளலாம் என்றும் தற்காலிக மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறும் பரணமக கூறியுள்ளார்.
இதனை காணாமல் போனோரின் உறவுகள் நிராகரித்தனர். தமக்கு நீதியே வேண்டும் என்றும் இழப்பீடு வேண்டாம் என்றும் கூறினர். இதனையடுத்து காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பில் உரிய பொறிமுறையின் அடிப்படையில் விபரங்களை வெளியிடுவதாகவும் பரணகம கூறியுள்ளார்.