வன்னியில் விடுதலைப்புலிகள் மாவீரராக அறிவிக்கப் பட்டவர் யாழில் இராணுவ சீருடையுடன் நடமாடினார்

வன்னியில் விடுதலைப்புலிகள் மாவீரராக அறிவிக்கப் பட்டவர் யாழில் இராணுவ சீருடையுடன் நடமாடினார்.

விடுதலைப்புலிகள் மாவீரர் என அறிவித்த எனது மகன் யாழில் இராணுவ சீருடையில் நடமாடியதை உறவினர்கள் கண்டனர் என தந்தை ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அந்த சாட்சியமர்வில் தவராசா என்பவர் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

மல்லாவி பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இருந்த தவராசா ஜெயதீஸ்வரன் (வயது16) 2000ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் பாடசாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு அவர்களின் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

அதன் பின்னர் 2001ம் ஆண்டு காலப்பகுதியில், எமது மகன் யாழில் நடைபெற்ற இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவு அடைந்து விட்டார் என கூறி அவரது வித்துடல் என மூடப்பட்ட பொட்டி கையளித்து இருந்தனர்.

பின்னர் மகனின் வித்துடல் என கூறி அதனுடன் நான்கு வித்துடல் அன்றைய தினம் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.

நாமும் எமது மகன் மாவீரர் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழில் உள்ள எமது உறவினர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு மகனை கொட்டடி பகுதியில் இராணுவ சீருடையுடன் கண்டு தாம் கதைத்ததாகவும்,

2001ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்குடன் விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது தமது 13 பேர் கொண்ட குழுவை இராணுவத்தினர் பொக்ஸ் அடித்து உயிருடன் பிடித்ததாக தம்மிடம் எமது மகன் தெரிவித்தாக அந்த உறவினர்கள் கூறினார்கள். அதன் பின்பே மகன் இறக்கவில்லை என தெரிந்து கொண்டு மகனை தேடி வருகின்றோம் என தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila