வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக அமைச்சர் றிசாட் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இணைத் தலைவராக மன்னார் மாவட்டத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த சாள்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த சிவமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் வவுனியா மாவட்டத்திற்கு அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி இருக்கும் போது அவரை புறந்தள்ளி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிவசக்தி ஆனந்தன் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பைச் சேர்ந்தவராக இருப்பதாலும், சுரேஷ் பிரேமச்சந்திரனின் விசுவாசியாக இருப்பதாலுமே றக்கணிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
இவரை தேர்தல் முடிந்த பின் வன்னியில் காணமுடியாத நிலை காணப்படுவதாகவும், அவ்வாறான ஒருவரை நியமிப்பதால் தொடர்ந்தும் வவுனியா மக்களே பாதிக்கப்பட வேண்டி வரும் எனவும் வவுனியா மக்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றார்கள்.
இதேவேளை, அனுபவம் மிக்க மக்களுடன் நிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நியமிக்கப்படாமை திட்டமிட்ட செயல் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் ஆனந்தன் மீதுள்ள வன்மத்தை இதன்மூலம் தீர்த்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைவிட பட்ஜெட் மீதான இறுதி வாக்கெடுப்பை எதிர்க்கப்போவதாக அறிவித்துள்ள செல்வம் குழுவினரைச் சமாதானப்படுத்தும் முயற்சியாகவும் இந்த நியமனம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சொல்லப்படுகின்றது.