தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு இயக்கமே தமிழ் மக்கள் பேரவை! முதலமைச்சர் விக்னேஸ்வரன்

எமது பேரவை இன்று தொடக்கம் தனது காரியங்களில் முழு மூச்சுடன் இயங்கத் தொடங்குகின்றது. அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் சகல மட்டத் தமிழ்ச் சகோதர சகோதரிகளும் முக்கியமாக எமது தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் சகலரும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,
தமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாள் முதல் சில விசித்திரமான விளைவுகளையும் விமர்சனங்களையும் நான் பார்த்துக் கவனித்து வருகின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு கட்சி உதயம் என்றது ஒரு செய்தி. விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுக் கட்சி என்றது இன்னொரு செய்தி. தேர்தலில் தோற்றவர்களுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டு என்றது மற்றுமொரு செய்தி. உங்கள் கட்சியை நாங்கள் ஆதரிப்போம் என்று பல மின்னஞ்சல்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து வந்து கொண்டிருக்கின்றன.
இவை அனைத்துமே பிழையான அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திகளும் கருத்துக்களும் என்று முதற்கண் கூற விரும்புகின்றேன்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் திரு.சம்பந்தன் அவர்களை நான் கொழும்பில் சந்தித்தேன். பல விடயங்களைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டோம். அப்போது எமது பேரவையின் உண்மை நிலையை, அந்தஸ்தை, குறிக்கோளை, தூரநோக்குகளை அவருக்குத் தெளிவு படுத்தினேன்.
அப்போது அவர் கூறினார், மக்கள் இயக்கமாக ஒரு இயக்கம் பரிணமிப்பதை நாங்கள் வரவேற்க வேண்டும். மக்கள் மட்டத்தில் இருந்து சகலரது கருத்துக்களும் கரிசனைகளும் வெளியிடப்பட வழியமைத்துக் கொடுக்கப்படுமானால் அதுவே ஜனநாயகம் என்றார்.
வேறு பல விடயங்களையும் அவர் அப்போது குறிப்பிட்டார். அவை பற்றியும் பேசிக் கொண்டோம். ஆனால் அவரின் இந்தக் கருத்து யாவராலும் மனதிற்கு எடுக்கப்பட வேண்டும்.
மக்களின் கருத்துக்களை அறியும் ஒரு நடவடிக்கையாகவும், மக்களிடம் இருந்து பெறும் கருத்துக்களை ஒழுங்கு படுத்தி வெளியிடும் நிறுவனமாகவும், மக்கள் நலம் காக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளுக்கு உறுதுணையாக இருப்பதற்காகவும், எமது உரிமைகளை வென்றெடுக்க தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு இயக்கமாகவுமே தமிழ் மக்கள் பேரவை உருவெடுத்துள்ளது.
எல்லா மட்டத்தில் இருந்தும் எல்லோரையும் ஒருங்கிணைத்து முன் செல்வதே பேரவையின் குறிக்கோள். இக்குறிக்கோளானது 2013ம் ஆண்டின் எமது மாகாணசபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளுக்கு இசைவானதாகவே இருக்கின்றது.
எமது பேரவையில் அரசியல்வாதிகளின் பங்கு பற்றல் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களை எழுப்பியுள்ளனர்.
இத்தருணத்தில் ஒரு நடந்த கதையொன்றைக் கூற ஆசைப்படுகின்றேன். 1959ம் ஆண்டில் சுமார் மூன்று மாதங்களுக்கு இலங்கையின் காபந்து பிரதமராக இருந்தவர் திரு.விஜயானந்த தகநாயகா அவர்கள்.
அவர் LPP என்ற ஒரு புதிய கட்சியைத் தாபித்துத் தகைமையுள்ள சிறந்த பலரைப் போட்டியாளர்களாக நியமித்துத் தேர்தலில் நின்றார். சுமார் 100 பேர்களைக் கொண்ட அந்தக் கட்சியில் இருந்து எவருமே தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அத்தiனை பேரும் தேர்தலில் தோற்றார்கள் பிரதமராக இருந்த அவரும் தோற்றார். தோற்றதும் அவர் மனந் துவண்டு விடவில்லை. தேவேந்திர முனை அல்லது டொன்றா என்ற இடத்தில் இருந்து பருத்தித்துறை வரையில் நடை பவனியில் சென்று பல ஆலயங்களைத் தரிசித்தார். மக்களைச் சந்தித்தார். அடுத்த தேர்தலில் அவர் நின்று அதில் பிரமாதமாக வென்றார்.
எனவே தேர்தலில் தோல்வி அடைபவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்ற கருத்து மறைய வேண்டும். எமக்குக் கருத்துக்களே முக்கியம். கருத்துக்கள் எங்கிருந்து வரினும் அவை நன்மை பயப்பனவெனின் அவற்றின் கர்த்தாக்கள் யாவர் என்று பார்க்காமல் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருக்க வேண்டும்.
ஒரு முறை காலி முகத்திடலில் நடுத்தர வயது இளைஞர்கள் சிலர் பந்தயத்திற்குப் பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். 'இதோ என் பட்டம் உன்னுடையதை மேவி மேல் செல்லப் போகின்றது' என்று ஒருவர் மற்றவருக்குக் எக்காளித்துக் கூறிக் கொண்டிருந்தார். உடனே அங்கிருந்த ஒரு சிறுவன் 'அது நடக்காது' என்று கூறினான். பட்டம் விட்டவருக்குக் கோபம் வந்து விட்டது. உடனே சென்று அந்தப் பையனை அடித்தார். 'ஏன் அப்படிக் கூறினாய்?' என்று கேட்டார். 'அண்ணே! நீ என்னை அடிக்க முன்னால் வந்திருக்காவிட்டால் மேட்டில் இருந்து கடற்கரை மண்ணில் கீழே விழுந்திருப்பாய்' என்றான்.
அப்பொழுது தான் புரிந்தது காலிமுக மேட்டின் வரமபுக்கே அந்தப் பட்டம் விட்டவர் வந்திருந்தார் என்றும் இன்னுமொரு அடி பின் எடுத்து வைத்திருந்தால் தலைகுப்புற அவர் விழுந்திருப்பார் என்றும். அந்தப் பையனை அடிக்க முன்னால் வந்ததால் அவர் பிழைத்துக் கொண்டார்.
சிறுவன் தானே, சிற்றூழியன் தானே, தேர்தலில் தோற்றவர்தானே என்றெல்லாம் நாங்கள் எமது மக்களின் மாண்மை மறந்து அநாகரிகமாகப் பேச விழைவது இனியேனும் நிற்பாட்டப்பட வேண்டும்.
ஒருவர் தேர்தலில் ஒருமுறை தோற்று விட்டால், மக்கள் அவரை என்றென்றும் புறக்கணித்து விடுவார்கள் என்று அர்த்தமில்லை. அதுமட்டுமல்ல. ஒரு மக்கள் இயக்கத்தில் மாற்றுக் கருத்துக்கள்தான் முக்கியம். எல்லாவிதமான கருத்துக்களும் ஆராயப்பட வேண்டும்.
நாம் வென்று விட்டோம்; எனவே எமது கருத்துத்தான் சரி என்று நாம் எண்ணுவது மடமை. ஆகவே கருத்துக்களுக்கு முதலிடம் கொடுப்பதே எமது கடப்பாடாகும் என்று கூறி வைக்கின்றேன்.
எமது மக்கள் இயக்கம் கருத்துக் கணிப்பில்த்தான் ஈடுபட முனைந்துள்ளது. தனி மனிதர்களின் தலைமையை நாங்கள் குறை கூறவில்லை.. ஆனால் வருங்காலத் தமிழ் பேசும் மக்களின் வாழ்வு தனி மனித விருப்பு, வெறுப்பு, அறிவு, ஆற்றாமை என்பவற்றில் மட்டுந் தங்கியிருப்பது சரியா என்ற கேள்வியை நாம் முன்னெடுக்கின்றோம்.
அது மட்டுமல்ல. இது வரை காலமும் தனிமனிதர்களைத் தமது வலைகளுள் விழச் செய்யுஞ் சதிகளில் அரசாங்கங்கள் வெற்றியைக் கண்டு வந்துள்ளன.
ஆனால் தனி மனிதர்களுக்குப் பின்னால் மக்களின் ஆளணி திரண்டு நிற்கின்றது என்று கண்டால், அப்பேர்ப்பட்ட ஆளணியினரும் அத் தனிமனிதர்கள் போல் சகலதையுஞ் சிந்தித்து ஆராய்ந்து சிறந்த முடிவுகளுக்கு வந்துள்ளார்கள் என்று கண்டால், அரசாங்கங்கள் தனிமனிதப் பேரங்களில் ஈடுபடாது இனரீதியான, பாதிக்கப்பட்ட மக்கள் மன ரீதியான தொடர்பாடல்களில் ஈடுபடவேண்டி வரும்.
அந்த விதத்தில் பார்க்கும் போது எமது தமிழ் மக்கள் பேரவை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எமது கட்சிகளுக்கு முக்கியமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சாதகமான, சகாவான, சார்பான சபையாகவே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறுதான் அது கடமையாற்றும்.
நிலமட்டத் தமிழ் மக்களைக் கட்சித் தலைமைத்துவங்களுடன் இணைத்து திடமான ஒரு அரசியல்ப் பலத்தை வெளிப்படுத்த இந்த அப்பியாசம் வழி வகுக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.
இப்பொழுதே தமிழர்கள் யாவரும் சேரப் பார்க்கின்றார்கள் என்ற ஒரு பீதி தென்னிலங்கையில் உருவாகி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. அதற்கு இடமளிக்கக் கூடாது என்ற கருத்தும் அங்கு விரவி வருகின்றது.
இதில் ஒரு விடயத்தை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் சிங்கள மக்களிடையே தமிழர்கள் சம்பந்தமாகச் சில பொதுக் கருத்துக்கள இருந்து வருவதை நாங்கள் உய்த்துணர வேண்டும்.
தமிழர்களைத் தழைக்க விட்டால் எமக்கு ஆபத்து என்ற ஒரு அடிப்படைக் கருத்து அங்கு சென்ற நூற்றாண்டிலிருந்து நிலவுகின்றது. ஆகவே தமிழர்களுள் சிலரை நாங்கள் எங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்கள் மூலமாகத் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு எண்ணம் பெரிய கட்சிகளின் தலைமைப் பீடங்களிடையே பொதுவாக இருந்து வருகின்றது. தமிழ் மக்களை எமக்குச் சார்பாகப் பாவிக்க வேண்டும். ஆனால் எழும்ப விடக்கூடாது என்பது அவர்கள் குறிக்கோள்.
ஆகவே தமிழ் மக்கள் மட்டத்தில் ஒரு இணைத் தலைமைத்துவத்துடன் பரந்து பட்ட ஒரு மக்கள் இயக்கம் உருவாகின்றது என்றால் அது தெற்கில் உள்ள பலருக்கு வயிற்றைக் கலக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் எமது தமிழ் மக்கள் சிலரிடையே அப்பேர்ப்பட்ட ஒரு எதிர்மறையான கருத்து நிலவுவதுதான் மனவருத்தத்தைத் தருகின்றது.
மூன்று முக்கிய விடயங்களை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். முதலாவது விடுதலைக்காகப் போராடும் எந்த ஒரு இனமும் அவ்வின அடிமட்ட மக்களை அத்திவாரமாக வைத்தே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
தனியார்களும், தரகர்களும் தகுந்த ஒரு தீர்வைப் பெற்றுத் தரமாட்டார்கள். அந்த அடிப்படையில் மக்களை மையமாகக் கொண்டு, எமது சாதாரண மட்ட மக்களையும் படித்த மக்களையும் நாம் ஒன்றிணைத்து மக்கள் இயக்கமாக இயங்குவது எமது அரசியல் தலைவர்கள் எம் சார்பில் திடமான ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க நாம் அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும்.
இரண்டாவது அரசியல் சிந்தனைகள் வேறு; நடைமுறை அரசியல் வேறு. இது வரை காலமும் எமது மக்கள் நடைமுறை அரசியல் என்ற சகதிக்குட்பட்டுத்தான் நின்றுழந்து வந்துள்ளார்கள். அந்தக் கட்சியா, இந்தக் கட்சியா, அவரா இவரா என்பதுதான் எமது கரிசனையாக இருந்தது. ஆனால் தெற்கில் கட்சி எதுவாக இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான அவர்களின் அடிப்படை எண்ணங்கள் பொதுவானதாகவே இருந்து வந்துள்ளன.
இப்பொழுது கூடப் பாருங்கள். ஒருவர் தமிழர் சார்பில் கதைத்தால் மற்றவர் அதற்கு எதிராகக் கதைக்கின்றார். கடைசியில் எமக்குத் தருவதாகக் கூறி எதையுந் தந்தபாடில்லை. ஆகவே 'நீ தருவதாகக் கூறு! நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். பின்னர் 'நான் என்ன செய்ய? அவர்கள் எதிர்க்கின்றார்கள்' என்று ஒன்றையும் கொடுக்காமல் விடுவோம்' என்ற முறையிலேயே காரியங்கள் நடந்து கொண்டு வருகின்றன.
அது மட்டுமல்ல. எமது தமிழ் மக்கட் தலைவர்கள் எவ்வளவு தான் அறிவில், ஆற்றலில் சிறந்தவர்களாக இருந்தாலும் புகழ்ச்சிக்கும் மாயமாலங்களுக்கும் இலேசில் அடிமைப்படுவர்களாகக் காணப்பட்டு வந்துள்ளார்கள். 1930ம் ஆண்டுகளில் சிங்களவர் மட்டும் மந்திரிசபையை (Pan Sinhala Cabinet) வகுக்க கருத்துக் கூறியது ஒரு தமிழ்க் கணிதப் பேராசிரியரே என்று கூறுவார்கள்.
காக்காயை வாய் திறந்து பாடும் என்று கூறும் நரி போல 'நீங்கள் தான் மிக மிகக் கெட்டிக் காரர். எமக்கு இதைச் சொல்லித்தாரும்' என்று அப்போதைய நரிகள் கோரியதும் எமது தமிழ்க் காக்கை வடையைத் தவற விட்டு விட்டது. இது தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.
ஆகவே ஒரு மக்கள் அணி பின்னால் இருந்து நுட்பமாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது என்றவுடன் காக்காய்கள் வடையைக் கீழே விழுந்து விடாது கெட்டியாப் பிடித்துக் கொள்வன என்பது எமது எதிர்பார்ப்பு.
மூன்றாவது கட்சிகளுக்கு அப்பால் செல்ல வேண்டிய காலம் தற்போது உதித்துள்ளது. கட்சி வேண்டாம் என்று நான் கூறவில்லை. கட்சிகளின் நிர்வாகம், ஒழுங்கமைப்பு, ஒழுக்கம், நோக்குகள் யாவையும் வெளிப்படைத்தன்மையுடனும் நிபுணத்துவச் செறிவுடனும் செயல்ப்படுத்தப்பட வேண்டும். ஒரு வேளை கட்சிகளினால் இதனைச் செய்ய முடியாதிருந்தாலும் அவற்றிற்குப் பக்கபலமாக நின்று பலதையும் அடியெடுத்துக் கொடுக்கும் வண்ணம் இந்தப் பேரவை செயற்பட இருக்கின்றது.
உதாரணத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை இராணுவ முகாம்கள் இருக்கின்றன, எங்கெங்கே இருக்கின்றன, கிட்டத்தட்ட எத்தனை போர் வீரர்கள் அங்கு இருக்கின்றார்கள் என்ற தகவலை ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதி கேட்கும் போது பதிலிறுக்க வேண்டியிருந்தால் எமது பேரவை அவற்றிற்கான தரவுகளைச் சேகரித்துத் தரும் என்று நம்புகின்றேன்.
எனவே தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் கட்சிகளுக்கு எதிரானதல்ல. தமிழ் மக்கள் நலன்களுக்கு எதிரானதல்ல. தமது தனித்துவத்தை மக்கள் மீது திணிக்க எத்தனிக்கும் ஒரு இயக்கம் அல்ல. மாறாக மக்கள் நலம் நாடும் ஒரு மக்கள் இயக்கம் அது. இதன் தலைமைத்துவம் தனி மனிதர்களின் செல்வாக்கில் கட்டி எழுப்பப்பட்டதன்று. மக்கள் மனமறிந்த, மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவோரின் தலைமைத்துவத்தைக் கொண்டது. இதில் விக்னேஸ்வரன் பங்கு அனுசரணை வழங்குவதே.
இதை வைத்துத் தாவிப்பிடிக்கப் பார்க்கின்றான் விக்னேஸ்வரன் என்பதெல்லாம் தாவிப் பிடிததுப் பழகிப் போன தப்பான அபிப்பிராயம் கொண்டவர்களின் தாறுமாறான தவறான கருத்துக்கள்.
எமது பேரவை இன்று தொடக்கம் தனது காரியங்களில் முழு மூச்சுடன் இயங்கத் தொடங்குகின்றது. அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் சகல மட்டத் தமிழ்ச் சகோதர சகோதரிகளும் முக்கியமாக எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் சகலரும் அதற்கு வழங்க வேண்டும் என்று கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன்.என தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila