மூத்த தலைவர் இரா.சம்பந்தர் ஒரு சில தினங்களுக்கு முன் மட்டக்களப்பில் ஆற்றிய உரை தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கின் முதலமைச்சர் தொடர்பில் அவர் கூறிய கருத்துக்கள் அடிப்படை நியாயமற்றவை. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இரா.சம்பந்தரை விசுவாசமாக ஆதரிக்கின்ற ஒருவர் என்றால் அவர் வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனாக மட்டுமே இருக்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தர் இருக்கவேண்டும் என்பதிலும் வடக்கின் முதல்வர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். சுருங்கக்கூறின், இரா.சம்பந்தரின் பக்கம் நின்று அவருக்காகக் கதைக்கின்ற -அவரை உசார்ப்படுத்துகின்ற அரசியல்வாதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறினால் - சம்பந்தரை பகைத்தால், தங்களின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்பதாலேயே சம்பந்தருடன் சேர்ந்து நிற்கின்றனர்.
ஆனால், வடக்கின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் அரசியலில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர். எந்தக் கட்டத்திலும் சம்பந்தருக்கு தன்னால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பவர்.
வடக்கின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நினைத்தால் வடக்கு - கிழக்கு மாகாணத்தின் தமிழ் அரசியல் தலைமையை ஒருகணப்பொழுதில் பெற்றுக் கொள்ளமுடியும்.
புதிய அரசியல் கட்சியை உருவாக்கி, வாருங்கள் நான் தலைமை தாங்குகிறேன் என்று விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு வார்த்தை கூறினால், அத்தனை தமிழ் அரசியல் தலைமைகளும் முதல்வர் விக்னேஸ்வரனுக்குப் பின்னால் அணிவகுத்துக் கொள்ளும்.
இன்று தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய ஒரே தலைவராக இருப்பவர் வடக்கின் முதல்வர் என்பது மறுக்கமுடியாத உண்மை.
அவரிடம் இருக்கின்ற வெளிப்படைத்தன்மை, நேர்மை, தமிழினத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்ற உறுதிப்பாடு, அவர் ஆற்றுகின்ற உரைகளின் ஆழமான கருத்துக்கள் என்பன காரணமாக வடக்கின் முதல்வரை தமிழ் மக்கள் தங்கள் நம்பிக்கைக்குரிய தலைவராக ஏற்றுள்ளனர்.
இது தவிர புதிய கட்சி ஒன்றை அமைத்து தன்னை தமிழ் மக்களின் தலைவனாக்கக்கூடிய மக்கள் செல்வாக்கிருந்தும் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் ஒருபோதும் அதைச்செய்யப் போவதில்லை.
அப்பேற்பட்ட ஒரு முதல்வரை இரா.சம்பந்தர் தனக்குத் துணையாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம். இருந்தும் அவர் உண்மை நிலைமைகளை மறந்து பேசுகின்றார். இதுதவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரின் உரைகள் அவரின் கருத்துக்கள் தொடர்பில் தமிழ் மக்கள் அவதானம் காட்டுவது அதிகம்.
இருந்தும் தனது அரசியல் அனுபவம், நிதானம் என்பவற்றையயல்லாம் ஒரு கணப்பொழுதில் இழந்து சம்பந்தர் ஆற்றிய உரை அதிர்ச்சிக்குரியதே.
எதுவாயினும் தமிழ் மக்களின் உரிமைகள், நலன்கள் தொடர்பில் நூறுவீத கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது.
இந்நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்குள் முரண்பட்டுக் கொள்வதைத் தவிர்த்து தமிழ் மக்களுக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். இதுவே இன்றைய அவசர தேவையாகும்.