இளைய தலைமுறையின் சுதந்திர வேட்கையை நிர்மூலமாக்கத் திட்டம்-முதலமைச்சர்(காணொளி)


யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

வன்மம் என்பது எமது மனங்களிலே உறைந்து கிடக்கின்றது. எம்மனதில் மறைந்து இருக்கும் வன்மம் தான் மனதிலும், மன்றிலும் அரங்கேறுகின்றது. சாதி,சமயம், இனம்,பால் போன்ற வழியில் பிழையான எண்ணம் மனதில் விதைக்கப்படுகின்றது. அவ்வாறு விதைக்கப்படுகின்ற எண்ணம் சந்தர்ப்பம் கிடைக்கப் பெறும்போது வன்செயலாக பரிணாமம் பெறுகின்றது.

பெண்களைப் பற்றி வயதானவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ சிந்தனையற்று கூறும்வார்த்தை எம்மனதில் படிகின்றன. பெண்கள் அடக்கியாளப்படுகின்றவர்கள், படுக்கை அறைக்கே பாவிக்கப்படுபவர்கள் என்ற கருத்து எம்மனதில் விதைக்கப்பட்ட பின் அறுவடை தான் இந்த பெண்களுக்கு எதிரான வன்செயல்கள். 

1985,1986 களில் வன்சொற்கள் வன்முறைகள் வன்மையாகவே கண்டிக்கப்பட்டன. அதனால் தான் நீண்டகாலமாக பெண்கள் எந்தப்பயமோ, அச்சமோ இன்றி பகல், இரவு வேளைகளில் கூட தனியாகவோ அல்லது கூட்டாகவோ சென்று வரக்கூடிய சூழ்நிலை 3தசாப்தங்களுக்கு மேலாக இங்கு காணப்பட்டது. நீண்டகால போர் முடிவுற்ற பின்னர் ஓரிரு வருடங்களுக்குள்ளேயே நிலைமைகள் மிகக்கேவலமாக மாற்றம் பெற்று விட்டன. 

உதாரணம் புங்குடுதீவு -வித்தியா கொலை தொடங்கி உடுவில் மூதாட்டி வரை வயது வித்தியாசம் இன்றி வன்புணர்வு. இந்தியா போன்ற சீதனக் கொடுமைகள் எமது நாட்டில் பெரிதளவில் இல்லாமல் இருந்தாலும்கூட பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் வலுப்பெற்றிருப்பது மனவேதனையளிக்கின்றது. இவற்றை ஆழமாக ஆராய முற்படும்போது எம்மீது தீயசெயல்கள் திட்டமிடப்பட்டே எம் இனத்தை அழிப்பதற்காக அரங்கேற்றப்படுகின்றனவோ என்று கேட்கப்படுகின்னறது. 

இராணுவம், பொலிஸாருக்கு மண்ணைத்தூவிவிட்டு பிறநாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் எடுத்து வரப்படுகின்றன. அல்லது அவர்களின் அனுசரணையுடன் தான் போதைப்பொருள் எடுத்து வரப்படுகின்றனவா என்ற ஐயப்பாடு எம்மிடையே எழுகின்றன. கடந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளின்படி தமிழ்மக்கள் ஒழுக்கசீலர்களாகவும், பண்பாடு உள்ளவர்களாகவும், கல்வியில் சிறந்து விளங்குபவராகவும், உலகம் முழுவதிலும் வியாபித்திருப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாத சிலர் போதைப்பொருள் பாவனையை எம்மிடையே அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

ஏனென்றால் எமது சமுதாயத்தை நிர்மூலமாக்கினால் தான் சுதந்திர எண்ணம் எமது இளைய இனத்தவரிடம் எழாது தடுக்கலாம் என்ற நப்பாசையே சிலரிடம் இருக்கின்றது. பெண்களை நுகர்வுப்பொருட்களாக்கி புலனுகர்ச்சியை இளைய சமுதாயத்தினரிடையே பரவவிட்டால் மாணவ சமுதாயத்தின் கல்வியில் கைவைக்கலாம், பாரம்பரியங்களை பழித்து ஒதுக்கலாம் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

மேலும் ஒன்றைக் கூற முற்படுகிறேன். அதாவது இதுபற்றி நேரடியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை தெரிந்திருந்தால் என்னைச் சந்தியுங்கள். அதாவது வன்னியில் கைபேசிகள் விதவைப் பெண்களிடம் இனாமாகக் கொடுக்கப்பட்டு வருகின்றதாம். இக்கைபேசிகள் விதவைகளின் பாதுகாப்பு நிமித்தமாம். இவர்கள் கைபேசிகள் இயக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டும் வருவதாகக் கேள்வி. பயிற்றப்பட்ட பின்னர் சரசமாக அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் போகாது இருக்க முடியாது. பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தால் முறைப்பாடு ஏற்கப்படாது போன்ற நடவடிக்கை இடம்பெறுகின்றது.  
இளைய தலைமுறையும், பெண் வர்க்கமும் பாதுகாக்கப்பட வேண்டும். பிள்ளைகளே மிக விழிப்பாக இருங்கள். பெற்றோர்களே பிள்ளைகளின் செயலில் மாற்றம் தெரிந்தால் அவர்களை அழிவிலிருந்து மீட்டெடுங்கள். பிள்ளைகளே கல்வியில் கூடிய சிரத்தை எடுத்தால் அறிமுகப்படுத்தப்படும் மாயைகள் கானல்நீர் போல மறைந்து விடும்இ எனவே மனதளவில் எம்மை பெற்ற தாய்மார்களே பெண்கள் என்ற எண்ணம் தலைதூக்கினால் வன்செயல்களுக்கு இடமிருக்காது என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila