இராமாயணப் போர் தொடங்கி விட்டது. இலங்கை வேந்தன் இராவணன் சீதாதேவியை சிறை வைத்திருந்தமையால் இலங்கை மண்ணில் போர் நடக்கும் விதியாயிற்று.
இராவணன் தரப்பில் கும்பகர்ணனை போருக்கு அனுப்புவதற்காக உறங்குகின்ற அவனை விழித்தெழுப்பக் கடும் பிரயத்தனங்கள் நடந்தேறுகின்றன.
யானைப் படைகள், குதிரைப் படைகள், தேர்ப் படைகள் என எல்லாமும் சேர்ந்து ஒரு பெரும் போர்ப்படையே நின்று கும்பகர்ணனின் உறக்கம் கலைக்க எடுத்த முயற்சி திருவினையாக்குகிறது.
கடும் உறக்கத்தில் இருந்து விழித்த கும்பகர்ணன், ஆனதோ! வெஞ்சமர்... என்று கேட்கிறான். சீதையைச் சிறைபிடித்ததால் போர் மூளும் என்று உணர்ந்திருந்தால், ஆரம்பத்திலேயே கும்பகர்ணன் தன் அண்ணன் இராவணனுக்குப் புத்திமதி கூறி சீதையை விடுவித்திருக்க முடியும்.
எங்கே? போர் வரப்போகிறது என்று நினைத்தால், அநீதி நடக்கும் போது அடக்கமாக இருப்பது வழக்கமே. அந்த அமைதி புத்திசாலித்தனம் அன்று. பிரச்சினைகள், சிக்கல்கள் ஏற்பட முன்னதாகவே நிலைமையை ஒரு சுமுகமான சூழ்நிலைக்குக் கொண்டு வரவேண்டும். இல்லையேல் எல்லாமும் கடினம்தான்.
இராமன்போர் தொடுத்தபோதுதான் ஆனதோ! வெஞ்சமர் என்று கும்பகர்ணன் கேட்கிறான். அதனால் என்ன பயன். போர் நடந்து இராவணன் தரப்பு மாண்டதே மிச்சம்.
இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களிலும் நடந்துள்ளன. இதற்கு உலக நாடுகளில் பல்வேறு சான்றாதாரங்கள் உள. இச்சான்றாதாரத்தில் எங்கள் நாடும் எங்கள் இனமும் விதிவிலக்கல்ல.
இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்து அரசு வெற்றி பெற்றது என்றவுடன் முதலில் விழித்தெழுந்து தமிழ் மக்களுக்குப் பேராபத்து என்று கூக்குரலிட வேண்டியவர்கள் தமிழ் அரசியல் தலைவர்கள்.
எனினும் அவர்கள் போருக்குப் பின்பான அமைதியை தங்களுக்கான ஓய்வுகாலமாகக் கருதிக் கொண்டனர். இக்கருத்து நிலை எந்த முயற்சிக்கும் இடம்கொடுக்கவில்லை.
இதனால் எங்கள் விடயத்தில் சர்வதேச சமூகம் பாராமுகம் கொண்டது. ஏதோ! அரசு தருவதைப் பெற்றுக் கொள்வோம். எங்களின் சுய அரசியல் இலாபத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தால் அது போதும் என்பதாக எங்கள் அரசியல் தலைவர்கள் இருந்தனர்.
தர்மத்தை நிலைநிறுத்த இராமபிரான் இலங்கா புரிக்கு வந்தது போல் தமிழ் மக்கள் பேரவை உத யமாகியபோதுதான் தமிழ் அரசியல் தலைவர்கள் உறங்கி விழிக்கும் கும்பகர்ணன் போல, ஆனதோ! வெஞ்சமர் எனத் திணுக்குற்று எழுந்து, ஸ்கொட்லாந்துக்கு ஓடுகின்றனர். இனித்தான் அங்குள்ள சுயாட்சி பற்றி இவர்கள் கற்றுத் தெளியப் போகின்றார்களாம்.
2009ஆம் ஆண்டு போர் முடிந்து 7 ஆண்டுகள் முடிகின்ற நிலையில், இப்போதுதான் ஸ்கொட் லாந்தின் சுயாட்சி பற்றி அறியப்போகின்றனர் என்றால் தமிழ் மக்கள் பேரவை இல்லாமல் இருந்திருந்தால், நிலைமை என்னவாகும் என்பதை நினைக்கவே மனம் அஞ்சுகிறது. அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருந்திருக்கும்.