பருத்தித்துறையில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு நேற்றையதினம் இலக்காகியுள்ளது.
இச் சம்பவம் நேற்று அதிகாலை 4.40 மணியளவில் பருத்தித்துறை தாழையடிப் பகுதியில் இடம்பெற்றது.
பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான மேற்படி பேருந்தானது அதிகாலை 4.30 மணியளவில் தாழையடிப் பகுதியூடாக திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இதேவேளையே மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் இருவர் பீங்கான் போத்தல்களி னால் பேருந்தின் மீது வீசி தாக்குதல்களை மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளனர். இதில் சாரதிக்கு முன்பக்கமாகவுள்ள பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில் சாரதிக்கு எதுவித காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பருத்தித்துறை சாலை முகாமையாளர் கடும் கண்டனம் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள கண்டனத்தில் பருத்தித்துறைசாலைக்கு சொந்தமான பேருந்துகளே தொடர்ச்சியாக இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்வாங்கப்பட்டு வருகின்றது.
இத் தாக்குதல்கள் சாரதிகளை குறி வைத்தே இடம் பெறுவதால் சாரதிகள் உயிருக்கு அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விட நேற்றைய தினம் பருத்தித்துறைசாலைக்கு சொந்தமான பேருந்துகள் அனைத்தும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்ட நிலையிலே சேவையில் ஈடுபட்டுள்ளன.
இத்தகைய கறுப்புக் கொடி பறக்கவிடல் செயற்பாடு இ.போ.ச பருத்தித்துறை சாலை சாரதிகளின் ஒட்டு மொத்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.