TNA எமது ஆலோசனைகளை ஏற்கவில்லை - வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் வேண்டும்

TNA எமது ஆலோசனைகளை ஏற்கவில்லை - வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள்  வேண்டும் -

தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டத்திற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த சிலர் ஏற்கவில்லை என அக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்து உள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

காலாவதியான குற்றங்களை கிளறி சேறடிப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல, அவை வேண்டும் என்றே சில ஊடகங்கள் செய்கின்றன, ஊடகங்கள் தற்போதைய நடைமுறை பிரச்சனைகளை மக்களுக்கு தெளிவு படுத்தாமல் காலவதியான விடயங்களை கிளறி சேறடிப்பு செய்ய கூடாது.

ஈ.பி,ஆர்.எல்,எப். தீர்வுத்திட்டம் தயாரிப்பதற்காக பொதுமக்கள் , சிவில் சமூகம் ,  புலம் பெயர் உறவுகளிடம் இருந்து ஆலோசனைகளை பெற்றதே அதற்கு என்ன நடந்தது என கேட்பவர்களுக்கு எனது பதில்,

எமக்கு வந்த ஆலோசனைகளின் பிரகாரம் தீர்வு திட்ட வரைவை தயாரித்தோம் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் அந்த நேரம் அதனை ஏற்காததால் அது வெறும் ஆலோசனைகளாகவே இருக்கின்றன.

அதனை நாம் தற்போது தமிழ் மக்கள் பேரவையிடம் கையளிக்க உள்ளோம். அவர்கள் எமது ஆலோசனைகளை தாம் தயாரிக்கும் தீர்வு திட்ட வரைவில் உள்வாங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

எம்மை தோற்று போனவர்கள் என்கிறார்கள். தோல்வி எமக்கு புதிதல்ல, நாம் முன்னரும் தோல்வி யடைந்துள்ளோம், அதற்காக நாம் ஓடி ஒழிய மாட்டோம். தோற்றாலும் மக்களோடு நாம் நிற்போம்.

எமது தோல்வி ஆயுத குழுக்களின் தோல்வி ஆயுத குழுக்களை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என சிலர் பிரச்சாரம் செய்கின்றார்கள். அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்டு இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர். அதேபோன்று வடமாகாண சபையில் ஐந்து உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

யாழில் போட்டியிட்ட நான் தோல்வி அடைந்தேன். இருந்தாலும் நான் 30 ஆயிரம் வாக்குகள் பெற்றேன். என்னை திட்டமிட்டு தோற்கடிக்க  யார் யார் ஒன்றிணைந்து எனது வாக்குகளை களவாடி எவர் எவருக்கு பகிர்ந்து கொடுத்தார்கள் எனபது பற்றி எல்லாம் எனக்கு தெரியும்.

இப்பொழுது இதனை நான் சொன்னால் நீதிமன்றம் சென்று நீதியை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறுவார்கள். நீதிமன்றம் சென்று இதற்கு நீதி கிடைக்க முதல் இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்து விடும்.

நீதியை பெறவுதற்காக என பெருமளவு பணத்தை செலவளித்து எனது வீட்டை விற்கும் அளவுக்கு நான் போக தயாராக இல்லை.

நாங்கள் கதிரை மேல் ஆசைப்பட்டு வந்தவர்கள் அல்ல, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி பல போராட்டங்களுக்கு மத்தியில், பல இன்னல்களை சந்தித்து அரசியலுக்கு வந்தவர்கள். எவருக்கும் கொடி பிடித்து வாழவேண்டிய தேவை எமக்கு இல்லை


தமிழ் மக்கள் பேரவையை பார்த்து பயப்படாதீர்கள்.



தமிழ் மக்கள் பேரவையை பார்த்து பலர் பயப்படுகின்றார்கள், மக்கள் பேரவையில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை பார்த்து பயபடுகின்றார்களா ? வடமாகாண முதலமைச்சரை பார்த்து பயபப்டுகின்றார்களா ? என தெரியவில்லை.

மக்களின் போராட்டம் , தியாகங்கள் , இழப்புக்கள் என்பவற்றை மதித்து தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றே நாம் மக்கள் பேரவையில் ஒன்றிணைந்து உள்ளோம்.

தற்போது எம்மை பார்த்து தீவிரவாத கொள்கை உடையவர்கள் என்கிறார்கள்,அதென்ன தீவிரவாத கொள்கை என்பதனை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்,

நாம் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் என்கின்றோம் , சமஷ்டி தீர்வு வேண்டும் என்கின்றோம், சுயநிர்ணய உரிமை வேண்டும் என்கின்றோம். இவை தான் தீவிரவாத கொள்கையா ? என்பதனை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.


இராணுவத்தினரை வெளியேற்றி சொந்த இடங்களில் மக்களை குடியேற்றுங்கள்.
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வினை பெற்று தருவேன் என கூறி இருந்தார்.

அவர் கூறிய தீர்வு என்பது நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் அவர்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதாக இருக்க வேண்டும்.

இராணுவத்தினரை வெளியேற்றாமல் மீள் குடியேற்றம் என்பது சாத்தியமற்றது. எனவே இராணுவத்தினரை வெளியேற்றி அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும்.

அதனை விடுத்து, அவர்களை வேறு இடங்களில் குடியேற்றுவது என்பது இதுவரை காலமும் அந்த மக்கள் முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் கஷ்டங்களுக்கு பயனில்லாமல் போய்விடும்.

அத்துடன் இராணுவத்தினரை வெளியேற்றாமல் இருப்பது என்பதும் வடக்கை இராணுவ மயமாக்களுக்குள் வைத்திருக்கவே முயல்கின்றார் ஜனாதிபதி விரும்புகின்றார் என புலனாகும்.என தெரிவித்தார்.

வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் .

இராணுவத்தின் வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும் தெரிவிக்கையில்,


திருகோணமலையில் இரகசிய முகாம் இருபதாக கூறினேன் அது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை, பின்னர் வரணியில் இராணுவ சித்திரவதை முகாம் இருந்ததாக கூறிய போதிலும் அதற்கும் நடவடிக்கை இல்லை. தற்போது வீமன்காமம் பகுதியில் வதை முகாம் இருந்து இருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிட படுகின்றன.  அதற்கு வழமை போல் எந்த நடவடிக்கையும் இல்லை.

வீமன்காமம் பகுதியில் வதை முகாம் இருந்து இருக்காலம் என சந்தேகிக்க பட்ட வீடுகளில் இருந்த ஆதாரங்களை இராணுவத்தினர் அழித்து உள்ளனர். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க படவேண்டும்.

இவை இதுவரை காலமும் இராணுவத்தினரின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்தது தற்போது மக்கள் மீள் குடியேற அனுமதிக்க பட்ட போது அவை வெளியில் வருகின்றன.

எனவே வதை முகாம்கள் இருந்ததாக சந்தேகிக்க படுகின்ற இடங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்க படவேண்டும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
 
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில், 
 
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் சிலர் ஒன்றினைத்து வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்காக முன் ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் எனக்கு அறிவித்து உள்ளன.
 
அந்த உறுப்பினர்கள் தமது கட்சியின் மேல் மட்டத்தினரின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறன செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அறிந்து கொண்டேன் என தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila