காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள், ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நேற்று(சனிக்கிழமை) கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்தநிலையில் இதில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்துள்ளார். இதன்போது சாட்சியமளித்துள்ள அவர், எனது கணவரான சோதிநாதன் கோபிநாத் (காணாமல் போகும் போது வயது 28) முச்சக்கரவண்டி சாரதியாவார்.
2011ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி எனது கணவர் காணாமல் போனார். அவர் காணாமற்போகும் போது மகள் பிறந்து 1 மாதமாகும். பின்னர் 2015ஆம் ஆண்டு இறுதியில் அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட கைதிகள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்தது.
அந்த செய்தியில் எனது கணவரின் பெயரும் வெளிவந்திருந்தது. இதனையடுத்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு நாம் சென்று கேட்ட போது அந்த பெயரில் ஒரு கைதி சிகிச்சை பெற்று சிறைக்கு திரும்பியதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நாம் சிறைச்சாலைக்கு சென்று கேட்டபோது அவ்வாறு ஒருவர் அங்கு இல்லை எனவும் மணியந்தோட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவரே உள்ளார் எனவும் தெரிவித்தனர். அவரை காண்பிக்குமாறு நாம் கேட்டபோது சிறைச்சாலை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
கணவர் காணாமற் போன போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நாம் முறைப்பாடு செய்தோம். மறுநாள் இராணுவ சீருடையில் வந்த புலனாய்வு பிரிவினர் ஏன் முறைப்பாடு செய்தீர்கள் என எம்மை மிரட்டியதுடன் சிவில் நிர்வாகத்தை நாங்களே மேற்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தனர். கணவர் காணாமற்போனமை தொடர்பில் பிரதேச செயலாளரிடம் நாம் முறையிட்டபோது அவரே எம்மை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யும்படி கூறினார். எனவே, தான் நாம் முறையிட்டோம் என நாம் கூறியபோது, அவர்கள் எம்மை மிரட்டி விட்டுச் சென்றனர் என அவர் சாட்சியமளித்துள்ளார்.