தமிழ் அரசியல் கைதிகளின் பரிதாபம் காணாத நீதியோ!


இராமன் காடேகினான் என்ற செய்தி கேட்டதும் புத்திர சோகம் தாள முடியாமல் தசரத மன்னன் உயிர் துறந்தான். அந்திம கிரியை செய்ய வேண்டிய இராமன் காடே கியதால் தசரதனின் உடல் பரதனின் வருகைக்காக காத்திருக்கிறது.

ஆள வேண்டியவன் காடுறைந்தான்; ஆண்ட மன்னன் உயிர் துறந்தான். அயோத்திமாநகர் துன்பத்தில் வீழ்ந்தாலும் மன்னன் தசரதனின் அருகில் எவரும் இல்லை.

மன்னனாக இருந்த போது தசரதனுக்கு முன்னும் பின்னுமாக ஓடித்திரிந்தவர்கள் செத்த மாட்டில் இருந்து உண்ணி கழன்றது போல் ஒவ்வொருவராக வெளியேறிவிட்டனர்.
முடிசார்ந்த மன்னருக்கும் இதுதான் முடிவு என பது நியதியாயிற்று. எல்லாம் இருக்கும் இடத்தில் இரு க்கும் போதுதான் என்பதற்கு தசரத மன்னனின் வாழ்வு மட்டுமல்ல; எங்கள் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வும் நல்ல உதாரணம்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மனைவியின் தந்தை ஏரம்பமூர்த்தி ஆசிரியர் அவர்கள் கிளிநொச்சியில் காலமானபோது ஏகப்பட்டவர்கள் ஏரம்பமூர்த்தி மாஸ்டரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக அரசியல் தலைவர்கள் கண்ணீர் விடாக் குறையாக ஏரம்ப வாத்தியாரின் அருகில் நின்று அஞ் சலி செலுத்தினர். எல்லாம் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக வேண்டும் என்ற நோக்கில் நடந்தவைதான்.

2009-ம் ஆண்டு மே 18-ம் திகதிக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் தோற்று விட்டனர் என்ற செய்திக்குப் பின்னர் வன்னியில் இருந்து வெளியேறிய பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி இவர்களை பராமரிப்பதிலும் உறவு என்று சொல்வதிலும் பலரும் எட்ட நின்று கொண்டனர்.
வயோதிபர்கள் என்றும் கூட பார்க்காத பேரினவாத அரசு, வேலுப்பிள்ளை தம்பதியரை சிறையில் அடைத் தது.   

 இவர்களை விடுதலை செய்யுங்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் எவரும் கேட்டிலர். பிரபாகரனின் மாமனார் இறந்தபோது, பாடாய்க் கிடந்தவர்கள் பிரபாகரனின் பெற்றோர் சிறையில் அடைபட்ட போது ஏன்? என்று கேட்டிலர்.ஆக, சிறையில் வேலுப்பிள்ளை இறந்தபோதுதான் பார்வதி அம்மையாருக்கு விடுதலை கிடைத்தது. சுருங்கக்கூறின் தன் மனைவி பார்வதிக்கு சிறையிலிருந்து விடுதலை கொடுத்தவர் வேலுப்பிள்ளை என்று கூறிக்கொள்ளலாம்.

வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிக்கிரியைகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இருந்ததால் நடந்து முடிந்தது. சிறையில் இருந்து விடுதலை பெற்ற பார்வதி அம்மையாருக்கு மருத்துவர் மயிலேறும்பெருமாள் இருந்ததால் வைத்தியசாலையில் வைத்துப் பராமரித்தார். இல்லை என்றால் எல்லாம் அம்போதான். 

தலைவர் பிரபாகரன் இருந்தபோது பிரபாகரனை ஒருமுறையேனும் சந்திக்கத் துடித்தவர்கள் - சந்தித் தவர்கள் வல்வெட்டித்துறையில் நடந்த பிரபாகரனின் பெற்றோர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேயில்லை. இதுதான் எங்கள் வழக்கமும் பழக்கமும் என்பதால்,
சிறைகளில் வாடித் துடிக்கும் எங்கள் தமிழ் அரசி யல் கைதிகளுக்காக குரல் கொடுக்க எவருமில்லாமல் போயிற்று.

இதே தமிழ் அரசியல் கைதிகள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் அவர்களின் பிறந்தநாளு க்கும் பாராளுமன்றத்துச் சிற்றுண்டிச்சாலையில் கேக் செய்து அனுப்பப்பட்டிருக்கும். என்ன செய்வது? விடுதலை என்ற பொதுநலத்துக்காக புறப்பட்டவர்கள் இன்று தனியன்களாக துன்பப்படும்போது நாம் பேசாமல் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை. 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila