திட்டமிட்ட குடியேற்றங்கள் இனியும் இடம்பெறக்கூடாது

மூன்று தசாப்தகாலமாக இடம் பெற்று வந்த யுத்தமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்கள் ஆகப் போகின்றது. இந்த கொடூர யுத்தத்திற்கு காரணமான தமிழர்கள் மீதான ஒடுக்கு முறை மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் போன்ற விடயங்களுக்கு இன்னமும் முடிவு கட்டப்பட்டதாக தெரியவில்லை.
வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக தொடர்ந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் வரவு-–செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
கிழக்கில் புனானையில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதில் கிழக்கு மாகாண ஆளுநர் தீவிரம் காட்டி வருகின்றார். இராணுவ ஆளுநர் போய்விட்டார் என்று பார்த்தால் இனவாத ஆளுநர் வந்து விட்டாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் திட்டமிட்ட வகையிலான சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் இனப்பரம்பலை இல்லாதொழிக்கும் வகையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டே வந்தன.
வடக்கு, கிழக்குப் பிரதேசம் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களாக இருக்கக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்ட வகையில் இத்தகைய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதுவே இனப்பிரச்சினை உச்சம் பெறுவதற்கு முக்கிய காரணியாக அமைந்திருந்தது.
வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னரான கடந்த ஐந்து ஆண்டுகாலங்களில் புதிதாக 18 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2009 ஆம் ஆண்டு வரை வடக்கு மாகாணத்தில் 29 விகாரைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளன.
திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் அண்மையில் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் 'நிலமும் நாங்கள்' எனும் கருப்பொருளிலான போருக்குப் பின்னைய கால காணிப் பிரச்சினைகளை புரிந்து கொள்ளல் தொடர்பான கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.
திட்டமிட்ட குடியேற்றங்களினால் பாரம்பரியமாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த இடங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. உதாரணத்திற்கு திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் தொகையானது 1911 ஆம் ஆண்டிலிருந்து 1981ம் ஆண்டு வரையான கால கட்டத்தில் 3.8 வீதத்திலிருந்து 33.6 வீதமாக மாறியுள்ளது.
அதேகாலகட்டத்தில் தமிழ் மக்களின் எண்ணிக்கையானது 56.8 சதவீதத்திலிருந்து 33.7 வீதமாக கீழிறங்கியது. அதேகாலகட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்களின் சனத்தொகை 7 வீதத்திலிருந்து 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழ் பேசும் மக்களின் தொகை 37 சதவீதத்திலிருந்து 20 வீதமாக குறைவடைந்துள்ளது. இது 1983 ஆம் ஆண்டுக்கு முன்னைய புள்ளிவிபரங்களின் கணிப்பீடாகும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறான இன அடிப்படையிலான மாற்றங்கள் தான் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட சேருவில, அம்பாறை போன்ற தேர்தல் தொகுதிகள் 1976 ஆம் ஆண்டில் உருவாக வழிசமைத்தன.
இதே மாதிரியான மாற்றங்கள் தற்பொழுது வடமாகாணத்தின் தென்பகுதியிலும் ஆரம்பமாகிவிட்டன என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதனைவிட 1971ம் ஆண்டு தொடக்கம் 1987ம் ஆண்டுவரையான காலத்தில் இலங்கையில் அரசியல் வன்முறை என்ற நூலில் பேராசிரியர் காமினி சமரநாயக்க, வடமாகாணத்தை சுற்றி 2 லட்சம் குடியானவர்களை குடியேற்றுவது என்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.
அதனால் வடக்கை சுற்றி ஒரு பாதுகாப்பு வலயத்தை உண்டாக்க வேண்டுமென்றே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதிலிருந்து திட்டமிட்ட வகையில் வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளமை நிரூபணமாகின்றது என்றும் முதலமைச்சர் தனது உரையில் விரிவாக எடுத்துக்கூறியிருந்தார்.
1985ம் ஆண்டு 9 அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலும் தமிழர் பகுதிகளில் அவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இவற்றிலிருந்து வடக்கு, கிழக்கில் அன்று தொட்டு இன்றுவரை சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, மணலாறு பகுதி வெலி ஓயாவாக மாற்றப்பட்டு அங்கு தற்போது பெருமளவான குடியேற்றங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறான நிலைமை இனியும் தொடருமானால் நாட்டில் நல்லிணக்கம் என்பது ஏற்படுவதற்கு ஒருபோதும் வாய்ப்பு ஏற்படாது.
யுத்த காலத்தில் தமிழ் மக்கள் பல்வேறு இடப்பெயர்வுகளை சந்தித்தனர். தற்போதும் வடக்கு, கிழக்கில் அதிபாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கப்படாத நிலையில் தமது சொந்த காணிகளில் மக்கள் மீளக்குடியேற முடியாது அல்லல்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் திட்டமிட்டவகையில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவது என்பது தமிழ் மக்களின் மனங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தும் விடயமாகவே அமையும்.
தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் இந்த நிலைமைகளில் சற்று மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கில் முன்னர் வசித்து வந்த சிங்கள மக்கள் மீள் குடியேற்றப்படவே வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.
ஆனால் இவ்வாறான மீள்குடியேற்றத்தைப் பயன்படுத்தி பெருமளவானோரை குடியேற்றும் திட்டமிட்ட செயற்பாடுகள் இடம் பெற்றுவிடக்கூடாது.
சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் தொடர்ந்தும் தமிழ் தரப்பினரால் விசனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண வடக்கிலும் கிழக்கிலும் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் மக்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.
தமிழ் மக்களின் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் இடம்பெறாது. முன்னைய அரசாங்கத்தைப் போலவே எம்மையும் கருதாது அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.
இந்த நாட்டின் சகல பகுதிகளிலும் மூவின மக்களும் வாழ்வதற்கு உரிமை உள்ளது. அதேபோல் வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனாலும், யுத்த கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நிலங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அவர்களுக்குரிய நிலங்களில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ண கூறியிருக்கின்றார்.
உண்மையிலேயே அமைச்சரின் இத்தகைய கருத்து வரவேற்கத்தக்கதாகும்.
இதேபோன்ற கருத்திலும் செயற்பாட்டிலும் சிங்கள தலைமைகள் ஈடுபடுமானால் நாட்டில் தமிழ், சிங்கள மக்களிடையே எந்தவொரு விரிசல் நிலையும் ஏற்படமாட்டாது.
இதுவரை காலம் நடந்த தவறுகளை திருத்தி இனியாவது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசாங்கம் செயற்படவேண்டும்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இனியும் வடக்கு, கிழக்கில் இடம்பெறாது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila