எமது சமூகத்தில் முரண்பாட்டை ஏற்படுத்தி மத்திய அரசு நன்மையடைய முயற்சிக்கிறது: சி.வி
65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை செயற்படுத்துவதனூடாக எமது சமூகத்தினரிடையே முரண்பாடுகளையும் ஏற்படுத்தி அதனூடாக மத்திய அரசாங்கம் பலவிதமான நன்மைகளை பெறுவதற்கு முயற்சிக்கிறது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 48ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியிலுள்ள வடமாகாண சபை செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது மீள்குடியேற்ற அமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள விசேடமான வீட்டுத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதான பிரேரணை ஒன்று மாகாண சபை உறுப்பினரால் கொண்டுவரப்பட்டது. இப்பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து நிற்கின்ற மக்களிடம் சென்று அவர்களுக்கு சிலவற்றைக் கொடுத்து அவர்களை தம் பக்கம் இழுத்து அதனூடாக தாங்கள் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். குறிப்பாக இவ் வீட்டுத்திட்டத்தில் எங்களுக்கு எத்தனை வீடுகள் தேவை எவ்வாறான வீடுகள் தேவை என மாகாண அரசுடன் கலந்துரையாடாமல் மத்திய அரசாங்கம் தன்னிச்சையாகவே இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையானது பாரிய தாக்கங்களையும் பின்னடைவுகளையும் எமக்கு ஏற்படுத்தும். அத்துடன், தற்போது அவர்கள் கூறுவது போன்று வீட்டுத்திட்டம் அமைக்கப்படுமானால் அவ்வீடுகளில் திருத்தம் செய்யவேண்டும் என்றால் அல்லது அதற்குப் பதிலான வேறொரு பாகத்தை பொருத்த வேண்டுமானால் என்ன செய்வது? யாரிடம் போவது? இது எதுவுமே தெரியாது. எதிர்காலத்தினைக் கருதாமல் பணத்தினைக் கொண்டு செய்துவிட்டு அதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை யார் பார்ப்பது? இதற்கு யார் முகம் கொடுப்பது எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கூறுகையில், சுன்னாகம் பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் அரசாங்க சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கு மேற்படி வீட்டு திட்டத்திற்கான விண்ணப்பபடிவங்கள் விநியோகிக்கப்படுகின்றது என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மட்டுமல்ல வர்த்தக நிலையங்களிலும் விண்ணப்பபடிவங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறியதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வீட்டுத்திட்டத்தை எதிர்க்கிறது. ஆனால், மக்கள் விரும்புகிறார்கள் என காண்பிக்க முயற்சிக்கின்றார்கள் என குற்றஞ்சாட்டியதுடன் குறித்த வீட்டுத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் மாகாண சபையுடன் பேசி குறித்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் இல்லையேல் குறித்த வீட்டுத் திட்டத்தை நிராகரிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Add Comments