எங்கள் கதறல்களிலும் சிதறல்களோ?

கண்ணீர் விட்டு கதறி அழுவதைக் கூட வேடிக்கையாக பார்க்கும் கயமத்தனம் தான் இப்பொழுது எல்லாம் முன்நிக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொட்டு இன்று வரை ஒரு பகுதி மக்கள் சுதந்திரத்தையும், சந்தோசத்தையும் அனுபவிக்க இன்னொரு இனம் கண்ணீரையும், துன்பத்தையும் அடக்கு முறைகளையும் எதிர்கொண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
இலங்கை மன்னர்கள் காலத்தில் இருந்து இன்றைய ஜனநாயக ஆட்சியாளர்கள் வரையிலும் பதவிக்காக கடத்தல், காணாமல் போகச் செய்தல், கொல்லுதல், வீழ்த்துதல் என்று பட்டியல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.
வெள்ளையர்களின் ஆதிக்கப்பிடியில் இருந்து மீண்ட இலங்கை, சிங்களவர்களின் இனவெறி ஆதிக்க சகதிக்குள் சிங்கியது தமிழினம். அன்றைய நாளில் இருந்து இதுவரை நாளும், மகனை தாயும், கணவனை மனைவியும், பெற்றோர்களை பிள்ளைகளும், பிள்ளைகளை பெற்றோர்களும் தேடி அலையும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர் கதையாகிக்கொண்டே போகின்றது.
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு யார் வந்தாலும் கடத்தலுக்கும், வீதியில் சுட்டுப்போடுவதற்கும் குறையிருக்காது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா அம்மையாரது ஆட்சியிலும், மன்னர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் சரி கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் குறையே இல்லை.
நாளுக்கு நாள் வேட்டையாடல்களை செய்தவர்கள் ஆட்சியில் இருந்து அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டாலும் அவர்களின் காலத்தில் கடத்தப்பட்டவர்களுக்கும், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பது பற்றியதான சிறு தகவல்கள் கூட இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.
ஆனால் ஆட்சி மாறும் போதெல்லாம் ஏதோவொரு ஆணைக்குழுக்களை நியமித்து காலத்தை கடத்துவதும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதையுமே குறியாக வைத்துள்ளது இந்த ஆதிக்க சக்(க)தி.
கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் ஏனும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று ஏதேனும் பதில் கிடைக்கும் என நினைத்த போது காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் யாவரும் இறந்தவர்களாக கருதப்படுவார்கள் அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றார் தற்போதைய பிரதமர் ரணில்.
எனில், கடத்தப்பட்டவர்களுக்கு நேர்ந்தது என்ன? அதற்காக விசாரணையை யார் மேற்கொள்வார்? கடத்தியவர் யார்? எதற்காக கடத்தினர்? கடத்தப்பட்டவர் கொல்லப்பட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? பிள்ளைகளை, கணவன்களை இழந்தவர்களுக்கான இழப்பீடு என்ன? இதுவெல்லாம் இல்லாமல் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருதி சான்றிதழ் வழங்குவது எதற்கானது என்பதை ஆட்சியாளர்களும் பிரதமரும் விளக்க வேண்டும்.
ஆனால் ஏதோவொரு நொண்டிச்சாட்டுக்கு ஆணைக்குழுக்களை நியமித்து, காலத்தை இழுத்தடிப்பதை மட்டும் இன்னமும் நிறுத்திக் கொள்ளவில்லை இந்த அரசு.
கடந்த ஆண்டு காணாமல் போன உறவுகளை சந்திக்கச் சென்ற விசாரணை ஆணைக்குழு, அரசாங்கம் தந்த ஆடு மாடுகள் பற்றி விசாரணை நடத்தியிருந்தது. பிள்ளையை காணாமல் தவித்துக் கொண்டிருக்கும் தாயிடம் அரசாங்கம் கொடுத்த மாடு பற்றி விசாரித்த ஆணைக்குழுவின் பொறுப்பு அன்றே வெளிப்பட்டிருந்து.
இதைத்தான் நேற்று முந்தினம் நடந்த ஆணைக்குழுவின் அமர்வின் போதும் பொறுப்பற்ற விதத்தில் மக்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் பிள்ளை உங்களுடன் தொடர்பை ஏற்படுத்தினாரா? உங்கள் பிள்ளை இருந்திருந்தால் உங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருப்பார்? என்று கேட்டு இருக்கிறார்கள் ஆணைக்குழுவினர்.
பிள்ளையை இழந்து தவிக்கும் தாயிடம் இவ்வாறு கேள்வி கேட்பதன் மூலம் அவர் அடையும் துன்பம் பற்றி சிறிதேனும் இந்த ஆணைக்குழுவினர் மனதளவில் சிந்திக்கவில்லை போலும்.
தவிர, இருந்திருந்தால் அழைப்பை ஏற்படுத்தியிருப்பார் என்று கேட்டதன் மூலம் இப்பொழுது அவர் இல்லை என்பதை வெளிப்படையாக ஆணைக்குழு தெரிவிக்க விளைக்கின்றதா என்றொரு கேள்வியும் இப்பொழுது மேல் எழுகின்றது.
இவையெல்லாம் ஒருபுறம் நடந்தே மக்களின் போராட்டங்களை திசை திருப்புவதிலும் இந்த ஆதிக்க சக்திகள் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றன. தமிழர்களின் ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் திசை திருப்பி ஒன்றுமே இல்லாமல் செய்வது தான் இவர்களின் பிரதான நோக்கம். அதில் இவர்கள் வெற்றியும் கண்டிருந்தார்கள்.
காணாமல் போனவர்களை கண்டறியும் மெக்ஸ் வெல் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று இரண்டாவது நாளாக முல்லைத்தீவு பிரதேச செயலகத்தில் தனது விசாரணையை நடத்தியுள்ள அதேவேளை, சமகாலத்தில் கேப்பாபுலவு மக்கள் தங்கள் சொந்த காணியை மீட்க வேண்டி மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவருகின்றார்கள்.
இதேவேளை திம்பிலிப்பகுதியில் புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில் ஆய்வுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இம்மூன்றையும் சமகாலத்தில் வைத்தமையானது தான் இப்பொழுது பெரும் சிக்கலாக மாறியுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வரவிருந்தவர்கள் கேப்பாபுலவு போராட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை. கேப்பாபுலவில் இருந்தவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வரவேண்டியவர்களாக மக்கள் குழம்பிப் போய் ஏதோவொரு சந்தரப்பத்தை இழந்திருக்கிறார்கள்.
உண்மையில் முல்லைத்தீவு மக்கள் தான் இந்த காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்களே இன்று ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்க வரமுடியாமல் போனமை திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா என சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் கருத்து வெளியிடுகின்றார்கள்.
கேப்பாபுலவு மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடப்பதை அறிந்தவர்கள் உடனடியாக தங்கள் விசாரணை ஆணைக்குழுவின் திகதியினை மாற்றியமைத்திருக்க வேண்டும். ஆனால் நேற்றைய தினம் முழுமையாக எந்தவொரு மக்களும் போராட்டத்திலும் சரி, விசாரணையிலும் சரி ஈடுபட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டதனை அவதானிக்க முடிந்துள்ளது.
எஸ்.பி. தாஸ்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila