65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
குறித்த வீடுகள் வடபுலத்து சூழமைவுக்கு பொருத்தமானது அல்ல என்பது பொதுவான கருத்து.
எனினும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துவது என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
அதிலும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துவது என்பதில் உறுதியாக உள்ளார்.
ஒரு தமிழ் அமைச்சர் அதிலும் வடபுலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் 65 ஆயிரம் வீட்டுத்திட்டதை அமுல்படுத்துவதில் கங்கணம் கட்டி நிற்கின்றார்.
அதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் குறித்த வீடுகள் எங்கள் மக்களின் வாழ்வியலுக்கு பொருத்தமற்றது என உறுதிப்படக் கூறியுள்ளார்.
ஆக, 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில் மத்திய அரசு, மாகாண அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. சம்பந்தப்பட்ட வீடுகள் தொடர்பில் முதலமைச்சருக்கோ மாகாண சபை உறுப்பினர்களுக்கோ தெளிவுபடுத்த வில்லை என்பது புரிகிறது.
இத்தகையதோர் நிலைமையானது மத்திய அரசு ஒன்றை நினைத்துவிட்டால் அதை மாகாணசபையின் அனுமதி, அங்கீகாரமின்றி அமுல்படுத்த முடியும் என்ற அதிகார தொனிப்பு தெரிகின்றது.
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் அமையவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பில் மாகாண அரசுகளுக்கு தெரியப்படுத்துவது அவசியம்.
இதுதவிர அமைக்கப்படவுள்ள வீடுகளின் மூலப் பொருட்கள் வித்தியாசமானவை. வழமைபோல் கல், மண், ஓடு என்பவற்றால் அமைக்கப்படுகின்ற வீடாக இருந்தால் கூடப்பரவாயில்லை. வீடு கட்டிக்கொடுப் போம் என்று மத்திய அரசு நினைத்திருக்கலாம்.
ஆனால் அமைக்கப்படும் வீடுகளின் மூலப்பொருட்கள் வித்தியாசமானவை. இத்தகைய வீடுகள் வட புலத்தில் முன்னமும் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில் வீட்டுத்திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அரசுடன் கலந்தாலோசிப்பது, வடபுலத்தில் உள்ள புத்திஜீவிகளின் கருத்துக்களைப் பதிவு செய்வது என்பன கட்டாயமானதாகும்.
ஆனால், அந்தச் செயற்பாடுகள் எவையும் நடக்க வில்லை. இதனால் மத்தியில் இருக்கும் தமிழ் அமை ச்சரும், வடக்கு மாகாண முதலமைச்சரும் முரண்படுவதான தோற்றப்பாடு வெளிப்படுத்தப்படுகிறது.
அதாவது இரண்டு தமிழ் அமைச்சர்கள் இது விடயத்தில் முரண்பட்டுக் கொள்கின்றனர்.
எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுபோல் மத்திய அரசு நடந்து கொள்கிறது.
இங்குதான் தமிழர்கள் எந்த விடயத்திலும் ஒற்றுமைப்படமாட்டார்கள்; முரண்பட்டுக் கொள்வார்கள் என்ற கருத்து பதிவாகின்றது.
இது ஒருபுறமிருக்க, 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் வீடற்றவர்களுக்காக அமுலாகின்றதா? அல்லது அந்த வீட்டுத்திட்டத்தை அமைக்கவுள்ள நிறுவனத்துக்காக அமுலாகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.
வீடற்றவர்களுக்காக வீடு அமைக்கப்படுவதாக இருந்தால் அவர்களுக்கு ஏற்றவாறு வீட்டை அமைப்பதே பொருத்தப்பாடாக இருக்கும்.
எது எப்படியாயினும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாணசபை நிறைவேற்றியமை ஆற்றாக்கொடுமையால் நடந்ததாகவே கருதவேண்டியுள்ளது.
எனவே, இனிமேலாவது மத்திய அரசு, மாகாண அரசுடன் சேர்ந்து இணங்கி ஒருமித்த கருத்துடன் வீட் டுத்திட்டத்தை அமைக்க முன்வரவேண்டும்.
யார் யார் முரண்பட்டாலும் அந்த முரண்பாட்டால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.