இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக, தேசிய சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய காடுகள் அழிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலப்பரப்புகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு மற்றும் மடு ஆகிய பாதுகாக்கப்பட வேண்டிய காட்டுப் பிரதேசங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்புள்ள காடுகள் மீள்குடியேற்றத் தேவைக்காக அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தின் இயக்குநர்களில் ஒருவரான எஸ். விஸ்வலிங்கம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
வடக்கில் பெருமளவிலான காடுகள் அழிக்கப்படுவதன் மூலம் வன-உயிர்களும் நீர் நிலைகளும் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் கூறினார்.
இதனிடையே, பாதுகாக்கப்பட வேண்டிய காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வடக்கில் குடியேற்றப்படுவதாக அண்மைக் காலங்களில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மறுக்கின்றார்.
1990களில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இன்னும் சொந்தப் பிரதேசங்களில் மீளக்குடியமர வசதிகளின்றி புத்தளத்திலேயே வசித்துவருவதாக அமைச்சர் கூறினார்.
'அந்த மாவட்ட மக்களையே குடியேற்ற முடியாமல் இருக்கின்ற போது, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை குடியேற்றுவதாகக் கூறுவது பொய்' என்றார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.