பரவிப்பாஞ்சான் விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பரவிப்பாஞ்சானில் எவ்வித இராணுவ முகாமும் இல்லையென குறிப்பிட்ட சுமந்திரன், சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள மக்களது காணிகளில் இராணுவத்தினரே பலாத்காரமாக குடியேறி மக்களை, அங்கு செல்லவிடாமல் தடுத்து வைத்துள்ளதாக சுமந்திரன் இதன்போது குறிப்பிட்டார். இவ்வாறு மக்களது காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருப்பதாக, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரிடம் பொதுமக்கள் முறையிட்ட காரணத்தாலேயே, எதிர்க்கட்சித் தலைவர் அங்கு சென்று மக்களின் காணிகளை பார்வையிட்டதாக சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்கட்சித் தலைவர் அங்கு செல்லும்போது, எவ்வித தடையும் ஏற்படுத்தப்படவில்லையென்றும், எதிர்க்கட்சித் தலைவரது வாகனத்திற்கு வழிவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, விசாரணை நடத்தப்பட வேண்டுமென யாராவது கோரினால், மக்களை அவர்களுடைய சொந்தக் காணிகளில் குடியேற விடாமல், இராணுவம் ஏன் தடுத்துக்கொண்டிருக்கின்றது என்றே விசாரிக்கப்பட வேண்டுமென சுமந்திரன் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனியாருடைய காணிகளில் இராணுவத்தினர் பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் இவ்வாறு குடியேறியுள்ள விடயம் குறித்து, இன்று காலை பிரதமருடன் தானும் எதிர்கட்சித் தலைவரும் சந்தித்து கலந்துரையாடியதாகவும், இவ்விடயம் குறித்து இராணுவத்திடம் அறிக்கையொன்றை கோரவுள்ளதாக பிரதமர் தெரிவித்ததாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.