
தென்னிலங்கையின் சிங்கள பேரினவாதிகளதும் இனவாதிகளினதும் கூக்குரலை கட்டுபடுத்த இந்த அரசாங்கம் தமிழ் இளைஞர் யுவதிகளை பலியாக்குகிறதா என்ற சந்தேகத்தை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கை ஏற்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்ற செயற்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களது கைதும், கடத்தல் செயற்பாடுகளும் இலங்கையினுடைய இறையான்மையையும் நீதித்துறையையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. கைது நடவடிக்கையானது நீதிமன்ற ஆணையின் பிரகாரமோ, நீதிமன்ற கட்டளைக்கோ உட்பட்டு இடம்பெறுவது வேறு, ஆனால் அதனைவிடுத்து வெள்ளை வானில் சென்று அச்சுறுத்தி அடாத்தாக கைது செய்வதென்பது முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற தொடர்ச்சியான செயற்பாடாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளானது தமிழ் இளைஞர் யுவதிகள் மத்தியில் இருண்ட ஒர் சூழலையும் அச்சுறுத்தல் தன்மையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் நீக்குவோம் என கூறியவர்கள் அதனை நீக்குவதற்கு இன்னமும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மேலும் இந்த புதிய நல்லாட்சி அரசாங்கத்துக்கு தமிழ் மக்கள் தமக்கு நிம்மதியான நல்லதொரு வாழ்க்கை கிடைக்குமென வாக்களித்திருந்த நிலையில் அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் மீண்டும் மகிந்த ஆட்சியை போல நாமும் செய்வோம் என கூறுவதை போலவே உள்ளது. இதனை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.