
சமஷ்டி மூலம் இனவாதம் தலைதூக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) அமைச்சர் பீ. ஹெரிஸனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பல வருடங்காளாக அரசியல்வாதிகள் சமஷ்டி என்றால் நாடு பிளவு அடைந்துவிடும் என தொடர்ச்சியாக கூறிவருகின்றனர், எனவே சமஷ்டி என்றால் என்ன என்பது தொடர்பில் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவிலும் இந்த சமஷ்டி முறை நடைமுறையிலிருக்கின்றது. கனடா மற்றும் சுவிட்ஸர்லாந்திலும் இந்த சமஷ்டி முறைமை நடைமுறையிலுள்ளது. எனவே சம்ஷ்டி முறையினூடாக நாடு ஒருபோதும் பிரிந்து செல்லாது. வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்வு திட்டம் தொடர்பான பிரேரணை நேற்று முன்தினம் சபாநாயகர் கருஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எமது மக்களின் கருத்துக்கள், அபிப்பிராயங்கள் என்னவென்பது அந்த பிரேரணையில் முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளன’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.