
நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின்போது வட பகுதியில் காணாமல் போனவர்களில் மூன்று தமிழ் இளைஞர்கள், வெலிக்கடைச் சிறைச்சாலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் மாலைதீவிற்கும் இடையில் நல்லெண்ணத்தை மேம்படுத்தம் வகையில் அண்மையில் மாலைதீவு சிறைச்சாலையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 12 இளைஞர்களுள், குறித்த மூன்று தமிழ் இளைஞர்கள் உள்ளடங்குவதாகவும், குறித்த இளைஞர்கள் விசுவமடு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கணேஸ் இராமச்சந்திரன், நவரத்தினராசா ரஞ்ஜித், முத்துலிங்கம் யோகராஜா என்ற குறித்த இளைஞர்கள், யுத்த சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஆயுதக் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தபோதே மாலைதீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில், அண்மையில் வட மாகாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட அமர்வின்போது முறையிடப்பட்டதோடு, குறித்த இளைஞர்களின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முறைப்பாடொன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், காணாமல் போனதாக கூறப்படும் இளைஞர்களில் ஒருசிலர், மாலைதீவு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, வட மாகாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நிறைவில், ஆணைக்குழுவில் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.