சமஷ்டி குறித்து அரசாங்கத்துடன் முழுமையான பேச்சுவார்த்தை அவசியம் : சுரேஷ்
இவ்வருடத்தில் தமிழர்களுக்கு தீர்வொன்று கிடைக்குமென தான் கூறியதும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதற்கு ஆதரவாக இருக்கிறார்களென கூறியதும் தம்முடைய கணிப்பு என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில், இவை வெறும் கணிப்பாக இருக்கக் கூடாதென்றும், தமிழ் மக்களுக்கு முழுமையான தீர்வொன்று கிடைக்கப்பெற வேண்டுமென்றும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், சமஷ்டி அரசியலமைப்பு முறை வேண்டுமென்றும், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்றும் வடக்கு கிழக்கை இணைக்க முடியாதென்றும் கூறி வருகின்றனர். ஆகவே, இவ்விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன், முழுமையான பேச்சுவார்த்தை அவசியமென சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமே அரசாங்கம் தமிழ் மக்களுக்கான எவ்வாறான திட்டங்களை முன்னெடுத்துள்ளதென்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியுமென்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் கருத்தும் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கும் நிலையில், சிறந்த மூலோபாயங்களை வகுத்து இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
Related Post:
Add Comments