
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரது விடுதலை தொடர்பில் இந்தியாவில் நீண்டகாலமாக சர்ச்சைகள் நிலவி வருகின்றது. இந்த நிலையில், குறித்த 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு, இது குறித்து மத்திய அரசின் கருத்தை கேட்டு கடிதம் எழுதியது. இதற்கு பதில் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், 7 பேரையும் தமிழக அரசால் விடுதலை செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. அதேவேளை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர்களை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இதன் மூலம் 7 பேரது விடுதலை குறித்து கடந்த ஆண்டுகளில் தமிழக அரசின் கோரிக்கையை 2ஆவது முறையாக மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் கடந்த 2014ம் ஆண்டில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்த தமிழக அரசு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஏலவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அந்த கடிதத்தை நிராகரித்த நிலையில், கடந்த மாதம் 2ம் தேதி திடீரென மீண்டும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்த கடிதமும் நிராகரிக்கப்பட்ட நிலையில் 7 பேரும் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு மனு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.