நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விடுதலைக்காக காத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே சுரேஷ் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் அறவழியில் போராடி, நீண்ட காலம் சிறையில் வாடுகின்றவர்களுக்கு, சிறைச்சாலை திறப்பு என்னிடம் இல்லை என்று வேண்டா வெறுப்பாய் பதில் கூறுவது, அவர்களது மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதென சுரேஷ் மேலும் தெரிவித்தார்.
விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லையென்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கி அண்மையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான ஜெனிபன் மற்றும் கோமகன் ஆகியோர், அண்மையில் யாழ் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அவர்களுடைய மருத்துவ வசதிகள் என்பன குறித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.