அறக் கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரையுங்கள்


இந்திய தேசபிதா மகாத்மா காந்தியின் சத்திய சோதனை என்ற நூல் ஒரு காலத்தில் பலரின் வாசிப்புக்கு உரியது. 
மோகனதாஸ் என்ற சிறுவன் எப்படி மகாத்மா காந்தியாக இந்த உலகத்துக்கு தன்னை அடையா ளப்படுத்துகிறார் என்பதை அறிவதற்கு சத்திய சோதனையை வாசிப்பதுதான் ஒரே வழி. 

தன் வாழ்நாளில் தான் செய்த தவறான காரியங்களை எல்லாம் மகாத்மா காந்தி சத்தியசோதனையில் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளார். 
தவறுகளை உணர்ந்து திருந்துகின்றபோதே மனிதன் மகாத்மாவாகின்றான் என்ற உண்மையின் சாட்சியம்தான் சத்தியசோதனை. 

எனினும் இன்றைய சமகாலத்தில் மாணவர்கள் சத்தியசோதனை என்ற காந்தியின் சுயசரித நூலை வாசிப்பதற்கான சந்தர்ப்பமே இல்லை எனலாம்.
மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் அருகி விட்டது என்பதற்கு அப்பால், வாசிப்பதற்கான நேரம் இல்லை என்பதுதான் முக்கியமான காரணமாகும்.

பாடசாலை, பின்னர் தனியார் கல்வி நிறுவனம், பயிற்சி வேலைகள் இப்படியே மாணவர்கள் மிகப் பெரியதொரு நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளனர்.  
கல்வி என்பது அழுத்தத்தின் மத்தியில் கற்றக் கூடியதொன்றல்ல. படிப்பு மிகவும் சுதந்திரமாக, விருப்பத்தோடு மேற்கொள்ளப்பட வேண்டிதொரு விடயம். 

இருந்தும் எங்கள் மண்ணில் படி... படி... என்ற பெற்றோரின் அழுத்தம்; பாடசாலையில் இடை விடாத கற்றல் செயற்பாடு; ஓய்வுகொடுக்காத தனியார் கல்வி நிறுவனங்களின் போட்டிக் கலாசாரம் என அனைத்தும் சேர்ந்து இளம் பிஞ்சுகளின் மனங்களை வதைசெய்து விடுகின்றன.

ஆலய வழிபாடு, விடுமுறைக் காலத்து ஓய்வு, உறவுகளைச் சந்தித்து குசலம் விசாரிக்கும் பண்பாடு, வெளியிடங்களுக்குச்சென்று அங்குள்ள இயற்கை அழகுகளைக் கண்டுகளித்து மகிழ்வுறும் மனநிலை எதுவுமே கிடைக்காத நிலையில்,

மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள அழுத்தம் எனும் சிறையை உடைத்து எறிய முற்படுகின்றனர்.  
இந்த உண்மையின் வெளிப்பாடு ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் சீரழிக்கக்கூடியதாக  மாற்றமுறுகின்றது. இத்தகைய ஆபத்தான நிலைமையில் இருக்கக் கூடிய எங்கள் மாணவர் சமூகத்தை காப்பாற்றுவது எங்களின் கடமை. 

மாணவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர் என்றால் அதற்கு அந்த மாணவர்களோடு பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சகபாடிகள், கல்வித் திணைக்களங்கள், ஊடகங்கள், பொது அமைப்புகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்கள் சமூகமும் ஏதோ ஒரு வகையில் காரணமாகின்றன என்ற உண்மையை நாம் மறந்துவிடலாகாது.

எனவே, கல்வித் திட்டம்; பாடவிதானம் என்பவற்றுக்கு அப்பால், மாணவர்களை வழிப்படுத்து வது தொடர்பில் எங்கள் மாணவர்களுக்கு பொருத்தமான நடைமுறைகளை அறிமுகப்படுத்தி அதனை அமுலாக்குவது தொடர்பில் அந்தந்த வலயக் கல்வித்திணைக்களங்கள் கூடி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். 

இத்தகையதொரு முடிவில் அறக்கருத்துக்களை போதிப்பது; இறைவழிபாட்டில் நம்பிக்கை கொள்ளச் செய்வது; திருக்குறள் எனும் அறநூலை விளக்குவது; மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், அன்னை திரேசா, டாக்டர் அப்துல் கலாம் போன்ற உத்தமர்களின் வாழ்வியலை கதையாக எடுத்துரைப்பது என்ற விடயங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது எங்கள் மாணவச் செல்வங்களை வழிப்படுத்துவது சுலபமாகி விடும்.  இதைச் செய்வது-அவசரமும் அவசியமுமாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila