வடமராட்சி கிழக்கில் பொதுமக்களின் காணிகள் தேசிய பூங்காவாக பிரகடனம்: மக்கள் எதிர்ப்பு

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் 5 கிராமங்களில் பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்கள், விவசாய நிலங்கள், கடற்றொழில் செய்யும் பகுதிகள் உள்ளடங்கலாக பெருமளவு நிலத்தை வன ஜீவராசிகள் திணைக்களம் அடாத்தாக எல்லையிட்டு தேசிய பூங்காவாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தியிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கில் சுண்டிக்குளம், போக்கறுப்பு, முள்ளியான், கட்டைக்காடு, நித்தியவெட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள், விவசாய நிலங்கள், மற்றும் கடற்றொழில் செய்யும் பகுதிகள் உள்ளடங்கலாக பெருமளவு நிலத்தை வன ஜீவராசிகள் திணைக்களம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தியிருக்கின்றது.
இந்நிலையில் மக்கள் தங்களுடைய நிலத்திற்கு செல்ல முடியாமல், கடற்றொழில் மற்றும் விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்படுவதுடன், மக்கள் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் மக்களுடைய நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர். 
குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நேற்றைய தினம் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் எஸ்.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலர் கனகேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
1938ம் ஆண்டு தொடக்கம் மேற்படி பகுதியில் பறவைகள் சரணாலயம் ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில் 2015ம் ஆண்டு யூன் மாதம் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக சுண்டிக்குளம், போக்கறுப்பு, கட்டைக்காடு, நித்தியவெட்டை, முள்ளியான் ஆகிய கிராமங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கு முன்னர் பறவைகள் சரணாலயமாக இருந்த போது மக்கள் தங்கள் தொழில்களை செய்யவும், விறகு போன்றவற்றை வெட்டவும் சுதந்திரம் இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறில்லை.
மக்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. சில முரண்பாடுகள் உருவாகியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பெரிதும் சரியானவை.
குறிப்பாக தற்போது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் தனியாருக்குச் சொந்தமான குடியிருப்பு காணிகள், விவசாய காணிகள் காணப்படுகின்றன.
எனவே வன ஜீவராசிகள் திணைக்களம் சரியாக எல்லையிடாமல் இந்த நடவடிக்கைகளை செய்திருக்கின்றார்கள்.
எனவே கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டு சில தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம். அதாவது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் இருந்து தனியார் காணிகள், சுண்டிக்குளம் கடனீரேரி, மற்றும் தொழில் செய்யும் நிலங்கள் மற்றும் இடங்களை விலக்கி கொள்ள வேண்டும் எனவும் தேவைகளை பொறுத்து மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்மானம் எடுத்துள்ளதுடன்,
தனியார் குடியிருப்பு மற்றும் விவசாய, கடற்றொழில் செய்யும் காணிகளை அடையாளம் காண பிரதேச செயலகத்தின் காணி அலுவலர்கள் உள்ளடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழு 3 வாரங்களுக்குள் தங்கள் பணியை முடித்து அறிக்கை வழங்கியதன் பின்னர் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அது சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தேசிய பூங்காவாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள போதும், எல்லைகள் நிர்ணயம் செய்யப்படாமையினால் இதில் உள்ள சில பிணக்குகளை தீர்க்க முடியும் எனவும் பிரதேச செயலர் மேலும் கூறியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila