இலங்கையில் கேகாலை மாவட்டத்திலுள்ள அரநாயக்க பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றது. தொடரும் மழையால் சவால்களுக்கு இடையே மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட ஏராளமானோர் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியாளர்களினால் இன்று இரவு வரை 400 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ஏற்கனவே இந்த பிரதேசத்திலுள்ள குடியிருப்பாளர்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உடமைகளை இழந்த நிலையில் இடம்பெயர்ந்துள்ளன தற்போது மழையுடன் கூடிய காலநிலையும் தொடர்ந்தும் நிலச்சரிவு அபாயமும் இருப்பதால் மீட்பு பணியாளர்கள் சிரமங்களின் மத்தியிலே மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உடமைகளை இழந்துள்ள நிலையில், பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்கின்றனர் எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.