தொடரும் புலிகள் இயக்க உறுப்பினர் கைதும் தமிழ் தலைமைகளின் மௌனமும்


போரில் வீழ்ந்த பிறகு, புலிகளின் துயரக்கதைகளுக்கு முடிவேயில்லை. ஒவ்வொரு புலி உறுப்பினருக்கும் ‘போர்க்காலத்தை விடப் போருக்குப் பிந்திய நாட்கள் மிகக் கடினமானவை’. தூக்கமற்ற இரவுகளும் நிம்மதியுமற்ற நாட்களும் இவர்களைச் சுற்றி வளைத்துள்ளன. 

எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு திகில் நிறைந்த வாழ்க்கையில் தத்தளிக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் தொடங்கியிருக்கும் புலிகள் உறுப்பினர்களின் கைதுகளே இதற்கெல்லாம் காரணம். வாழ்க்கைக் கஸ்ரத்தை விட, இந்த மாதிரிக் கைது, விசாரணை, சிறை அல்லது புனர்வாழ்வு என்பதைப்பற்றிச் சிந்திப்பது நினைக்கவே முடியாத ஒன்று. இதயத்தை உறைய வைப்பது.

ஆனால், பலருக்கும் இதைப்பற்றியெல்லாம் புரியாது. அவர்கள் தாங்கள் உண்டு, தங்கள் பாடுண்டு என்றிருக்கிறார்கள். கைதுகளைப் பற்றிய சேதிகள் வந்தால் இந்த மாதிரி உறுப்பினர்களின் குடும்பங்களோடிருக்கும் உறவை ஒரு எல்லையில் நிறுத்திக் கொள்வார்கள். அல்லது விலகி விடுவார்கள். ‘எதற்கப்பா நமக்கு இந்த வம்பெல்லாம்? என்று.

எதற்காக இப்பொழுது இந்தக் கைதுகள் நடக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. உரிய காரணங்களை யாரும் எவருக்கும் சொல்வதுமில்லை. யாரிடமும் கேட்கவும் முடியாது. இன்னும் யார் யார் எல்லாம் கைது செய்யப்படுவார்கள்? அவர்களுக்கு என்ன நடக்கும்? இதற்கு முடிவு வருமா, இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் அறிந்து கொள்ள வழியும் இல்லை. இதைப்பற்றித் தமிழ் அரசியல்வாதிகளும் பேசமாட்டார்கள். தலைவர்களும் கதைக்க மாட்டார்கள். அப்படியாராவது பேசினாலும் ஊடக அறிக்கைகளோடு நிறுத்திக் கொள்வார்கள். அதற்கப்பால் அரசதரப்போடு பேசி, ‘என்ன, எது, எதற்கு இந்தக் கைதுகள்?’ என்று இந்தப் பிரச்சினையின் நிலைமையைப் பற்றி எந்த விளக்கத்தையும் பெற்றுத் தருவதில்லை. பாதிக்கப்படுவோரின் கவலைகளையும் அச்சத்தையும் போக்குவதுமில்லை.

இப்பொழுது பெரும் செல்வாக்கோடிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இரண்டு நிலைகளில் பலமாக உள்ளது. ஒன்று, எதிர்க்கட்சி ஆசனத்தில் இருப்பதால். மற்றது, நடப்பிலிருக்கும் அரசாங்கத்தின் நிழல் பங்காளியாக இருப்பதனால். ஆகவே மிக எளிதாக இந்தப் பிரச்சினையைக் கூட்டமைப்பினால் கையாள முடியும். அவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகளவில் உண்டு. சனங்களும் கூட்டமைப்பிடமே இந்த மாதிரியான பிரச்சினைகளுக்குத் தீர்வை எதிர்பார்க்கிறார்கள். குறைந்த பட்சம் ஆறுதலையாவது.

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்புக்கு பிறகு, முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் பலர், பல இடங்களிலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் இந்த மாதிரிக் கைதுகள் நடக்கக்கூடும். எனவே, இதனால் மிகப்பெரிய அச்சநிலை போராளிகளிடத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதைப்பற்றி அக்கறைப்படாமல் ஏன் தமிழ்த் தலைமைகள் இன்னும் இருக்கின்றன? புனர்வாழ்வு பெற்று வந்து வெளிப்படையாகவே பொது வாழ்வில் – இயல்பு வாழ்வில் ஈடுபட்டு வரும் போராளிகள் மீண்டும் மீண்டும் சிரமப்படுத்தப்படுவது எந்த வகையில் நியாயமானது? இதை எப்படி ஏற்றுக்கொள்வது? அப்படியென்றால் புனர்வாழ்வு நடவடிக்கையின் அர்த்தம் என்ன? எந்தக் காரணங்களும் சொல்லப்படாமல், குற்றத்தடுப்புப் பிரிவினால் அதிரடியாகக் கைது செய்யப்படுவதென்பது மிக மோசமான மனித உரிமை மீறலாகும். ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் போராளிகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் இந்த நிலை மிக மோசமான உளவியல் பாதிப்பை உண்டு பண்ணக்கூடியது. மட்டுமல்ல, அரசாங்கத்தின் மீதும் அதனுடைய நல்லெண்ண உருவாக்கத்தின் மீதும் ஐயப்பாடுகளை உண்டு பண்ணக்கூடியதும் கூட. இதைப்பற்றி ஏன் யாரும் சிந்திக்கவில்லை?


அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களிடையே குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துமாக இருந்தால், அதைப்பற்றிய விளக்கத்தைக் கேட்க வேண்டியது எதிர்க்கட்சியின் முக்கியமான பொறுப்பு. எதிர்க்கட்சியின் விளக்கக் கோரிக்கைக்கு தெளிவைத் தரவேண்டியது அரசின் கடமை. இதுதான் ஜனநாயகத்தின் நரம்புகளைப் பலப்படுத்தும் இடமாகும். ஆனால், இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்துவிட்டால் போதும். அரசாங்கத்துடன் நல்லுறவு இருந்தால் காணும் என்ற மாதிரி ஒரு மேல்நிலை உறவாடலுக்கு அப்பால் சனங்களின் கொதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எதைப்பற்றியும் சிந்திக்க முடியாதா?

புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுடைய வாழ்க்கை இப்பொழுது பகிரங்கமாகவே கேள்விக்குறியின் முன்னே நிறுத்தப்பட்டிருக்கிறது. புதிய ஆட்சியில், நல்லாட்சியில் சற்று நிம்மதி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நெருக்கடிகளும் தங்களின் மீதான கண்காணிப்புகளும் குறையும் என்று பெரும்பாலானோர் நம்பினார்கள். அந்த நம்பிக்கை பொய்த்துப்போயிற்று. இப்பொழுது நடந்து கொண்டிருப்பதோ வேறு காட்சிகள்.

சாவகச்சேரியில் படையினர் கைப்பற்றியிருந்த தற்கொலைக்கான அங்கி பற்றிய சேதியைத் தொடர்ந்து ‘புலிகள் மீண்டும் எழுச்சியடையத் தொடங்கிவிட்டார்கள். புதிய அரசாங்கம் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. போதாக்குறைக்கு புலிகளின் உருவாக்கமாக இருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறது. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே சவாலான – ஆபத்தான காரியங்கள் நடக்கின்றன’ என்று தென்னிலங்கைத் தீவிரத் தேசியவாதச் சக்திகள் கூக்குரலிட்டன.

இதனையடுத்து ‘புலிகளின் மீதான கண்காணிப்பில் நாம் மிக விழிப்பு நிலையிலேயே உள்ளோம். நாட்டின் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்று காண்பிப்பதற்காக அதிரடி நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. இதற்காகவே இந்தக் கைதுகள் அதிரடியாக நடந்து வருகின்றன. தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிப்பதற்காக அரசாங்கம் இதைச் செய்கிறது. குறிப்பாக மகிந்த அணியின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்காக. அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக.

அப்படியென்றால், புதிய அரசாங்கத்தின் நெருக்கடிகளைப் போக்குவதற்கான கவசமாக முன்னாள் புலிகளின் கைதுகள் பயன்படுத்தப்படுகிறதா? அப்படித்தான் கருத வேண்டியுள்ளது. ஆனால், இந்தக் கைதுகள் தொடர்பாக தான் கவமெடுப்பதாகவும் இதைப்பற்றி விசாரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லியிருக்கிறார். அது எந்த அளவில் நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை.

இவ்வாறு ‘புலிகளின் முக்கியஸ்தர்கள் என்று கருதப்படுகின்றவர்களைக் கைது செய்வதன் மூலம் புலிகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய மீளெழுச்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்திருக்கிறது’ என்று தென்னிலங்கை மக்களுக்கு அரசாங்கம் சேதி சொல்ல முற்படுகிறது. தென்னிலங்கை மக்களை ஆற்றுப்படுத்துவதன் மூலமே தன்னைச் சுற்றியிருக்கும் நெருக்கடிகளைத் தணிக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.

ஆனால், இந்த அரசாங்கத்தை உருவாக்குவதிலும் பலப்படுத்துவதிலும் தமிழ் மக்களின் ஆதரவும் உடன்பாடுமே முக்கிய பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறது. அப்படியென்றால், தமிழ்மக்களின் நலனையும் அரசாங்கம் கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கும் அப்பால், இந்த அரசாங்கத்தை தமிழ் மக்கள் எதிர்த்தாலும் கூட அவர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதிலும் போரிலே தோற்கடிக்கப்பட்ட ஒரு தரப்பை உரிய முறையில் பேணவேண்டிய கடப்பாடு அரசுக்குரியது. போரின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களில் ஒரு தொகுதியினர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமலாக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் உள்ள ஒரு நிலையில், மிஞ்சியவர்களைப் புனர்வாழ்வளித்து விடுதலை செய்து விட்டு, மீண்டும் கைது செய்வது அரசாங்கத்திற்கு நற்கீர்த்தியை ஒரு போதும் அளிக்காது. தவிர, ரணில் விக்கிரமசிங்க உருவாக்க முனையும் ‘வெள்ளை அரசு’ என்ற பிம்பத்தை இவை சிதைக்கும்.

முன்னைய அரசாங்கம் புலிகளைப் பழிதீர்க்கும் விதமாகவே நடந்து கொண்டது. அதனுடைய காலகட்டத்தில்தான் புனர்வாழ்வளிப்பும் விடுதலையும் நடந்திருந்தாலும் மறுவளமாக புலிகளின் எழுச்சிக் கதைகளை அவ்வப்போது விடுத்தும் வந்தது. குறிப்பாக ‘தமிழ்நாட்டில் புலிகள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று ஒரு தகவலை முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்திருந்தார். அந்தத் தகவல் தவறு என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இந்தியத்தரப்புக் கொடுத்த அழுத்தத்தை அடுத்து அது வாபஸ் வாங்கப்பட்டது. இருந்தாலும் புலிகளைப் பற்றிப் பேசிக் கிலிகொள்ள வைக்கும் காரியங்கள் முடியவில்லை. தென்னிலங்கையில் ஒரு தரப்பு எப்போதும் இதற்கான வேலையை உறங்காமலே செய்து கொண்டிருக்கிறது.

ஏனென்றால், புலிப்புச்சாண்டி இலகுவில் எல்லாவற்றுக்கும் எல்லாருக்கும் வெற்றியளிக்கக் கூடியது.

ஆனால், இதன் பாதிப்பை நேரடியாகத் தாங்கிக் கொள்ளவேண்டியிருப்பது நாம் முன்னர் குறிப்பிட்டிருப்பதைப்போல புலிகளின் முன்னாள் உறுப்பினர்களும் அவர்களுடைய குடும்பங்களுமே. இந்த எண்ணிக்கை சாதாரணமானதல்ல. ஏறக்குறைய 15000 க்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இனிமேல் எப்போதும் இந்த நாட்டில் சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கப்படுவார்களா? அப்படியானால், இவர்களுடைய எதிர்காலம் எப்படி அமையும்? இப்படி ஒரு நிச்சயமற்ற, நம்பிக்கையற்ற நிலையில் இவர்கள் எப்படித் தங்களுடைய வாழ்க்கையையும் குடும்பங்களையும் திட்டமிட முடியும்? இயல்பு வாழ்வில் ஈடுபடுத்துவதாகக் கூறிக்கொண்டே இவர்கள் இயல்பு வாழ்வில் சங்கமிப்பதைத் தடுக்கும் அரசாங்கத்தை வழிப்படுத்துவது யார்? அது எப்படி? இந்தக் கேள்விகளுக்கான விடை என்ன? அதை யார் தருவது?

புதிய அரசாங்கம் நல்லாட்சியை மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. அப்படியென்றால், அந்த நல்லாட்சியில் பல்வேறு நிலைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். அமைதிச்சூழலின் உருவாக்கம், அதன் ஸ்திரத்தன்மை, ஜனநாயக மேம்பாடு, போராளிகளின் மறுவாழ்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய முன்னகர்வு, இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வும் நல்லிணக்கமும் இப்படிப் பலவற்றிலும். ஆனால், அப்படி எந்த அதிசயமும் நடந்ததாக இல்லை. முந்திய அரசுக்கும் இந்த அரசுக்குமிடையில் நிற வேறுபாடுகள் மெல்லிய அளவில் இருக்கிறதே தவிர, குண வேறுபாடுகள் பெரிய அளவில்லை இல்லை. இதை ஒவ்வொரு விசயங்களிலும் உணர்ந்து கொள்ள முடியும்.

புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் கைதுகளை எப்படிக் கையாள முடியும்? இது தனியே சட்டப்பிரச்சினை மட்டுமல்ல. மனித உரிமைப்பிரச்சினையும் கூட. அதற்கப்பால் மனிதாபிமானப் பிரச்சினையும் கூட. ஆகவே இதை மூன்று வகையில் அணுக வேண்டும். ஒன்று பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் மனிதாபிமானக் கண்கொண்டு நோக்குவது. மற்றது, இவர்கள் தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் அதைச் சட்டரீதியாகப் பொலிஸ், நீதிமன்றம் என்ற அடிப்படையில் அணுகுவது. அடுத்தது, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் காரணம் சொல்லப்படாமல் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் கடத்தப்படுவதும் மனித உரிமை மீறல்களே. இந்த மூன்று நிலையிலும் இந்த விவகாரம் அணுகப்பட வேண்டும். இதைச் செய்யத் தவறும்போது அது அமைதிக்கான அடிசறுக்கலாகவே அமையும்.

ஆனால், இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கைதுகளோ இந்த மூன்றுக்கும் அப்பால் உள்ள குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினாலேயே மேற்கொள்ளப்படுகிறது. குற்றத்தடுப்புப் புலனாய்வுப்பிரிவின் கைகள் பலமாக இருக்கும்வரையில் போர்ச் சூழலே தொடர்கிறது என்றே அர்த்தமாகும். அதுதான் சட்டத்தையும் மனித உரிமை மீறலையும் மனிதாபிமானத்தையும் கடந்த ஒன்று. எனவே நாடு இன்னமும் யுத்தத்திலிருந்தும், யுத்த நினைவுகளிலிருந்தும், யுத்த முறைகளில் இருந்தும் இன்னும் மீளவில்லை. யுத்தக் கற்பனைகளிலிருந்தும் அச்சத்திலிருந்தும் மீளாத வரையில் சமாதானத்தைக் குறித்தும் அமைதியைக் குறித்தும் எப்படிச் சிந்திக்க முடியும்?

இறந்தவர்களை நினைத்து இருப்பவர்கள் மகிழும் காலம் இதுவா?- கருணாகரன் -
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila