
மகிந்த ராஜபக்ஷ காலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்டிருந்த கருத்து சரியாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சந்திரிக்கா பண்டாரநாயக் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ராஜபக்ஷ காலத்து இராணுவத்தினரின் பழக்கத்தின்படி சரணடைந்த அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அவர்களைப் பொறுப்பேற்றிருந்தால் அவர்கள் அனைவரையும் கொன்றிருப்பார்களேயன்றி இவ்வளவு காலமும் தடுத்து வைத்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
அவரின் கருத்துத் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
காணாமற்போனோர் தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்துக் கூறுகின்றனர். சந்திரிக்கா அம்மையார் கூறும் ஊகம் சரியானதாக இருக்கலாம். எமது பலத்த சந்தேகமும் அதுவே. ஆனால் ஊகமும் – சந்தேகமும் நீதியையும் – நிவாரணத்தையும் பெற்றுத் தரமாட்டாது. சரியான விசாரணை நடத்தப்படவேண்டும். இதற்குக் காணாமற்போனோர் அலுவலகம் நிறுவப்படவேண்டும்.
அந்த அலுவலகம் அமைக்கப்பட்டால் ஒவ்வொரு விடயமாக ஆராயப்படும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.