அரசியலில் இருப்பவர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும்


அரசியல் என்பது பெறுமதியான ஒரு சொற்பதம். இருந்தும் அரசியல்வாதிகளின் பிறழ்வுத் தனங்கள் அரசியலை கீழ்மையாக்கிவிட்டன. 

நாடு நல்லதாக இருக்க வேண்டுமாயின் அரசும் அரசியலும் சிறப்பாக அமைய வேண்டும். 
அரசு, அரசியல் பிழைக்கின்ற போது; நாடு, மக்கள் சிக்கலுக்கு ஆளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.

எல்லாப் பதவிகளுக்கும் தகைமைகள் இருக்கின்ற போதிலும் அரசியல்வாதிகளுக்கான தகைமைகள் வேறு விதமாக அமைந்து விடுகின்றன.  

இத்தகைய நிலைமைகள் மாற்றப்படாத வரை அரசியல்வாதிகளை குறை கூறுவது தொடரவே செய்யும். 
அரசியல் என்பது எல்லோருக்கும் விருப்பமானது அல்ல; அதற்குக் காரணம் அரசியல் பெற்று உள்ள அவப்பெயர் என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

எனவே, இந்த நாட்டை ஆளுகின்ற அரசியல் வாதிகள் மற்றையவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும். அரசியலில் சேர்ந்தால் ஊழல் செய்யலாம்; அதிகாரம் செலுத்தலாம் என்று நினைத்தால், எல்லாமும் அம்போ என்றாகி விடும்.

அரசியல்வாதிகள் கண்ணியம் மிக்கவர்களாக வாழும் போது அரசும் நாடும் மக்களும் தர்மம், நீதி, நேர்மை என்பவற்றை பின்பற்றி அறத்துடன் கூடிய வாழ்வை வாழ்வர். 
அரசியல்வாதிகள் என்போர் தேவையானவர் கள். அவர்கள் இல்லாமல் அரசு இல்லை என்பதால் அரசியல்வாதிகளை தர்மம் உணர்ந்தவர்களாக ஆக்குகின்ற பெரும் பொறுப்பு பொதுமக்களை சார்ந்ததாக உள்ளது. 

நாம் ஆதரிக்கும் அரசியல்வாதிகள் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துவிட்டால், அதுவே இந்த நாடு அழிவதற்குக் காரணமாகி விடும்.

ஆக நமது விருப்பத்துக்குரிய அரசியல்வாதிகளாயினும் அவர்கள் செய்வது சரி என்றால், அதைச் சரி என்றும் பிழை என்றால், அதைப் பிழை என்றும் கூறுவது மக்களின் தார்மீகக் கடமையாகும். 
எனினும் பல இடங்களில் தத்தம் ஆதரவுக்குரிய அரசியல்வாதிகள் எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்துவதற்கு ஆதரவாளர்கள் மல்லுக் கட்டி நிற்பதையே நாம் காண முடிகின்றது.

இதற்கு மேலாக அரசியல்வாதிகளும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், விடயங்களை தெளிவாக அறிந்து கொள்ளாமல் தமக்கு ஆதரவானவர்களை முழுக்கண்ணாலும் மற்றவர்களை ஓரக்கண்ணாலும் பார்ப்பது நீதியன்று. 

அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதையும்  அடுத்த பதவியையும் சதா நினைத் திருக்காமல் நீதியை, உண்மையை, நியாயத்தை துணிந்து நிலைநாட்ட வேண்டும்.
இதை அரசியல்வாதிகள் செய்கின்ற போது தர் மம் நிறைந்த ஆட்சி நிலைபெறும்.  இதற்காக அத்தனை அரசியல்வாதிகளும் கட்டாயமாக திருக் குறளைப் படிக்கவேண்டும்.

திருக்குறளில் கூறப்பட்டுள்ள அரச இலட்சணங்கள், அறக்கருத்துக்கள் என்பன உரியவாறு உணரப்பட்டால் துன்பம் இல்லாத அரசியலையும் ஆட்சியையும் மக்களையும் நாடு தந்து கொள்ளும் என்பதால்,

அரசியல்வாதிகளின் உயர் தகைமை என்பது திருக்குறளைக் கற்று அதன்படி நடக்கும் சீராளர்கள் என்பதாக இருந்தால் அது போதுமானதாகும். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila