ஒன்றுபடத் தவறிய தமிழர் தலைமைகள் – என். கண்ணன்

ஒன்றுபடத் தவறிய தமிழர் தலைமைகள் - என். கண்ணன்

இலங்கைத் தமிழரின் வரலாற்றுத் துயரை நினைவுகூரும் நாள் மீண்டும் ஒருமுறை கடந்து போயிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடந்த 18ஆம் திகதி முன்னெப்போதுமில்லாதளவுக்கு பரவலாக நடந்தேறியிருக்கிறது.
படுகொலைகள் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில், பிரதான நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அதில் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட ரீதியாகவும், முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களிலும், மாணவர்களால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
போர் முடிந்து ஏழு ஆண்டுகளில், முள்ளிவாய்க்காலில் படுகொலையான உறவுகளுக்காக, இம்முறைதான் பரவலான அஞ்சலி நிகழ்வுகள், அதிக இராணுவக் கெடுபிடிகளற்ற சூழலில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது.
போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் ஒரு நாளாகவே மே 18 அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வகையில் ஈழத் தமிழருக்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தமது கடப்பாட்டை நிறைவேற்றிக் கொண்டனரா? என்பதே இந்தப் பத்தியின் கேள்வி. ஏனென்றால், முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் நிகழ்வு என்பது கட்சிசார் அரசியலுக்கு அப்பாற்பட்டது. அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு வெளியே வந்து ஒவ்வொரு தமிழனாலும் அனுசரிக்கப்பட வேண்டிய ஒன்று.
இறுதிப் போரில் மாத்திரமன்றி, மூன்று தசாப்தகாலப் போரிலும் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூரும் பொது நாளாகவே இது கருதப்படுவதால், இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கிறது.
மூன்று தசாப்த காலப் போரில், கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும், ஒரே அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவர்கள், அதில் ஈடுபட்டவர்கள், அதனை எதிர்த்தவர்கள் கூட இதில் இருக்கின்றனர். அதைவிடப் போரில் எந்த அரசியல் சார்பற்ற அப்பாவிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது அரசியல் சார்பற்ற ஒன்றாகவும், தமிழரின் ஒற்றுமையான நினைவுகூரலை வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டியதே முக்கியமானது. இந்த விடயத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எந்தளவு காத்திரமானதாக இடம்பெற்றுள்ளது? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதுவரையில் மே 18 ஆம் திகதி இலங்கையில் இரண்டு விதங்களில் அணுகப்பட்டிருந்தன.
தென்னிலங்கையில் இது வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு கிழக்கில் துக்கநாளாக அனுஷ்டிக்கப்பட்டது.
இம்முறை இரண்டு இடங்களிலும், நினைவுகூரல் நாளாகவே அனுஷ்டிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும், தமிழர் தரப்பு இந்த விடயத்தில் எந்தளவுக்கு உறுதியுடன் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் நாளாகவும், பார்க்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் முடிவுக்கு வந்த இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழர் தரப்பு அதனை எந்தளவுக்கு உணர்வு ரீதியாக வலியுறுத்துகிறது என்பதை வெளியுலகிற்கு வெளிப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை கருதலாம்
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை தமிழர் தரப்பு, வெறுமனே சிங்கள அரசியல் தலைமைகளையும், படையினரையும் பழிவாங்கும் நோக்கில் தான் வலியுறுத்துகிறது என்று சர்வதேச சமூகம் ஒரு போதும் கணித்துவிடக் கூடாது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளைத்தான் அதற்கான களமாக தமிழர் தரப்பு பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், இம்முறை முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வுக்கு அரசாங்கத்தின் தடைகள் ஏதும் விதிக்கப்படாத போதிலும், அதனைத் தமிழர் தரப்பு பயன்படுத்திக் கொண்ட முறை விவாத்துக்குரியது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது தனியே, அழுது புரண்டு கண்ணீர் சிந்தி, அஞ்சலி செலுத்தி, மனதில் உள்ள காயங்களை ஆற்றிக் கொள்வதற்கான நாள் மட்டுமல்ல. அதற்கும் அப்பால், இது ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாளுமாகும்.
இப்படிப்பட்டதொரு நாளில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு இடத்தில், வெவ்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியதும், தமிழ் அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகள், ஒன்றுபட்டு நிற்கத் தவறியதும் தவறான முன்னுதாரணங்கள்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண சபை ஒழுங்கு செய்திருந்த பிரதான பிரதான நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனோ, பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்காதமை முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், இதுவரை நடத்தப்பட்ட எந்தவொரு நினைவேந்தல் நிகழ்விலும், இரா.சம்பந்தனோ, சுமந்திரனோ கலந்து கொண்டதில்லை. இம்முறையும் அவர்கள் பங்கேற்கவில்லை. அதற்கான காரணத்தையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை.
எவ்வாறாயினும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வன்று, மாலை கொழும்பில் நடந்த ஒரு நிகழ்வில் இரா.சம்பந்தன் பங்கேற்றிருந்தார். எனவே, அவர் வேறேதும் சப்பைக் காரணங்களைக் கூறித் தப்பிக்கொள்ள முடியாது.
தமிழர்களால் நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பங்கேற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனும், சுமந்திரனும், அதனை நல்லிணக்க முயற்சிகளின் ஒரு அம்சமாகவே வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர்.
அதேவேளை, தம்மைத் தெரிவு செய்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவர்கள் மதிக்க வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை அவர்கள் மறந்துபோய் விடுகின்றனர். அதனால் தான், முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் நிகழ்வு என்று வந்தவுடன் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.
இதில் பங்கேற்றால் சிங்கள அரசியல் தலைவர்கள் ஒன்றும் கோபித்துக் கொள்ளப் போவதில்லை. அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டே, இந்த நிகழ்வில் விஜயகலா மகேஸ்வரன் பங்கேற்கின்ற போது, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பங்கேற்பது ஒன்றும் பாவத்துக்குரிய செயலல்ல.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றால் சிங்கள மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் கெட்டுப் போய்விடும் என்று நியாயம் கூறவும் முடியாது. ஏனென்றால் இது ஒன்றும் புலிகளை நினைவு கூரும் மாவீரர் தினமல்ல.
முப்பதாண்டுப் போரில் பெரும் அழிவுகளைச் சந்தித்தது தமிழ் இனம் தான்.
இந்தப் போரில் பெற்ற வெற்றியை, அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் கொண்டாடுகிறது. அரசாங்கத்தின் நிகழ்வுகளில் அதிருப்தி கொண்டு, மஹிந்த ராஜபக் ஷ அணி தனியாகவும் கொண்டாடியது.
போரின் வெற்றியையும், போரில் உயிரிழந்த படையினரையும், நினைவு கூருவதற்கு சிங்களத் தலைமைகள் ஒன்றுபட்டு நின்றதைக் காண முடிந்தது.
ஆனால், முப்பதாண்டுப் போரில், ஆயிரக்கணக்கான மக்களைப் பறிகொடுத்த தமிழர்தரப்பில் அவ்வாறான நிலை இல்லை.
தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று கருதப்படும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. தொடர்ச்சியாக இந்த நிகழ்வுகளை இவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் இவர்களுக்கு ஒரு தனி அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்கிறதா என்றே சந்தேகிக்க வேண்டும்.
அதைவிட, ஒரு நினைவேந்தல் நிகழ்வில்கூட, தமிழர்களால் ஒன்றுபட்டு நிற்க முடியவில்லையே என்பது கேவலமான நிலை. அரசியல் களத்தில் கொள்கை வேறுபாடுகள் இருப்பது வழமை. அது தேர்தலில் மட்டும் தான்.
அரசியல் மேடைகளில், முட்டிக் கொண்டாலும், மேடைக்குப் பின்னால், அவ்வப்போது கூடிக் குலாவிக் கொள்ளும், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களைக் கூட, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் காண முடியவில்லை.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து ஏழு ஆண்டுகளாகியும், தமிழர் தரப்பினால், வலுவாக எழுந்து நிற்க முடியாதிருக்கிறது என்றால், அதற்குக் காரணம், இந்தத் துருவநிலைதான்.
துக்கநிகழ்வுகளில், கருத்து வேறுபாடுகளையும், கோபதாபங்களையும் பார்ப்பதில்லை என்பது பொதுவான பண்பாடு. எல்லாளனைத் தோற்கடித்த துட்டகைமுனு அந்த இடத்தில் நினைவுச்சின்னத்தை அமைத்து, அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டதாக வரலாறு கூறுகிறது.
துட்டகைமுனுவின் பரம்பரையில் வந்தவர்கள், அந்த மரபைக் கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டும் தமிழர் தரப்பு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில், ஒன்றுபட வேண்டிய தமது கடப்பாட்டை மட்டும் ஏன் மறந்து போனது?

– என். கண்ணன் –
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila