புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பிராஜாவுரிமை…! அழுவதா – சிரிப்பதா?

நல்லாட்சி அரசாங்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு மீண்டுமொரு செய்தியை அனுப்பி இருக்கின்றது. அதாவது புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்திருக்கின்றார்.
கடந்த மூன்றாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, நிலையியற் கட்டளையின் பிரகாரம், பிரதமரை நோக்கி கேள்விகளை கேட்டார். அதில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு, அவர்கள் நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து போகும்போது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு பிரஜா உரிமை வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற இலங்கைப் பிரஜைகள் உட்பட வெளிநாடுகளில் தொழில் நிமிர்த்தமாக வாழ்கின்றவர்கள், தேர்தல்களில் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இதை நல்லாட்சி அரசாங்கத்தால் செய்ய முடியுமா? என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் பிரஜா உரிமை வழங்கும் என்று தெரிவித்திருக்கின்றார். பிரதமர் அவ்வாறு கூறியிருப்பதை மேலோட்டமாகப் பார்த்தால் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அந்நியோன்னியமாகவே நடந்து கொள்வதைப் போலவே இருக்கின்றது. ஆனால் சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் பல உள் நோக்கங்கள் இருப்பது போல் தெரிகின்றது.
முன்னர் மஹிந்த அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று புலம்பெயர்ந்து வாழும் நூற்றுக் கணக்கான தமிழர்களை தடை செய்ததோடு, அவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கும் முயற்சி செய்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் அந்தத் தடையை நீக்கி அவர்கள் நாட்டுக்குத் திரும்பலாம் என்று கூறியது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது, இலங்கைப் படைத்தரப்பினரிடையே அதிர்ச்சியை தோற்றுவித்தது. இலங்கையின் தேசிய பாதுகாப்பைக் கருதி சிலரை தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது தடை நீக்கமானது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே மாறியிருக்கின்றது என்று அவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.
புலம் பெயர்ந்து வாழும் மக்களை அரசாங்கம் நாட்டுக்கு வருமாறும், நாட்டில் முதலீடுகளை செய்யுமாறும் ஒரு பக்கம் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கையில் மறுபக்கம், யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளி நாடுகளுக்கு தஞ்சம் தேடியும், வேலை தேடியும் சென்ற தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் தற்போது நாட்டில் சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாக நம்பி நாடு திரும்பும்போது, விமான நிலையத்திலேயே கைது செய்து சிறைகளில் அடைத்து விடுகின்ற வேலையை படைத்தரப்பு செய்து கொண்டிருக்கின்றது.
விமான நிலையத்தில் கைக்கூலிகளாக செயற்படும் சில முன்னாள் விடுதலைப் புலிகளை வைத்துக் கொண்டு ஆட்களை அடையாளம் காண்கின்ற இராணுவப் புலனாய்வுப் பிரிவு, நாடு திரும்பும் தமிழர்களை இலங்கைப் படைகள் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற அச்சத்தில் பல தமிழ் இளைஞர் நாடு திரும்பாமலே வெளிநாடுகளில் ஒப்பந்த காலத்தை நீடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் நாட்டுக்கு வரலாம் என்றும், முதலீடு செய்யலாம் என்றும், அவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கலாம் என்றும் அரசாங்கம் எழுந்தமானமாக கூறுகின்றதே தவிர, அவர்கள் கைது செய்யட மாட்டார்கள் என்பதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு உத்தரவாதத்தை இலங்கை அரசாங்கத்தால் வழங்க முடியுமா?
அப்படி என்றால் ஏன் அரசாங்கம் இவ்வாறான அறிவிப்புக்களை விடுக்கின்றது என்ற கேள்வி எழக்கூடும். அதற்கு இலகுவான பதில் ஒன்று இருக்கின்றது. அதாவது, இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு காட்டிக் கொண்டிருக்கும் தற்போதைய முகத்தை அப்படியே பாதுகாத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றது.
இந்த அரசாங்கம் மனித உரிமை மீறல்களை குற்றமாக பார்க்கின்றது, தமிழ் மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கின்றது, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்புவதை ஊக்குவிக்கும் புறச்சூழலை தோற்றுவித்து வருகின்றது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்படுத்தி தீர்வொன்றைக்கான முயற்சிக்கின்றது, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இல்லாது செய்ய விரும்புகின்றது என்றெல்லாம் ஒரு பார்வையை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இவ்வாறு ஒரு பார்வையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்றால், மஹிந்த ராஜபக்சவைப் போல் தாம் இல்லை என்பதை உணர்த்துவதும், அதனூடாக, பெரும் சவாலாக உருவெடுத்திருக்கும் நிதிப் பிரச்சனைக்கு சர்வதேச நாடுகளின் உதவியை பெறுவதுமே உடனடி எதிர்பார்ப்பாக இருக்கலாம். சர்வதேச சமூகத்திற்கு காட்டப்படுவதைப்போல் இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் செயற்படுகின்றதா? என்றால் அதுவும் இல்லை.
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்படகின்றது அதற்கு அரசு சாதகமாக பதிலளிக்கவில்லை.  காணாமல் போனவர்கள் தொடர்பாக தமிழ் மக்களிடமிருந்து முறைப்பாடுகளையும், வாக்குமூலங்களையும் அரசாங்கம் குழு அமைத்து பதிவு செய்துள்ளது. அடுத்ததாக உரிய விசாரணைகள் நடத்தப்படுமா?, தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்பதைப் பற்றியும் அரசாங்கம் வெளிப்படையாக எதையும் தமிழ் மக்களுக்கு கூறவில்லை.
பாதுகாப்புக் காரணங்களுக்காக படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிப்பதாக பல தடவை அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் 100 ஏக்கர் விடுவிப்பதாக அரசாங்கம் காலையில் அறிவித்தால் மாலையில் 75 ஏக்கரை படையினர் மீண்டும் முள்வேலி அமைத்து அடைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் நடைமுறையாக இருக்கின்றது.
வடக்கில் தேவைக்கு அதிகமாகவும், மக்களின் குடியிருப்பு பகுதிக்குள்ளும் இராணுவம் இருப்பதை தமிழ் மக்கள் அரசுக்கு சுட்டிக்காட்டி வருவதோடு, படையினரை குறைப்புச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், வட மாகாண ஆளுனரோ, வடக்கில் இராணுவத்தை வெளியேற்றுமாறு கேட்காதீர்கள், இராணுவத்தை அபிவிருத்திக்கும், மீள் கட்டுமானத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சமாதான இராணுவமாக இராணுவத்தைப் பாருங்கள் என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார்.
புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளை மீண்டும் கைது செய்யும் அரசாங்கம், அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு போதாது என்று ஒரு காரணத்தையும் கூறுகின்றது. இத்தனையும் நடந்து கொண்டிருக்கும்போதுதான் பிரதமர், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அரசாங்கம் பிரஜா உரிமை வழங்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.
இதை எண்ணி சிரிப்பதா? அழுவதா?
- ஈழத்துக் கதிரவன்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila