தமிழர் தாயகமெங்கும் நினைவேந்தல் எழுச்சி! நெடுந்துயர் வாட்ட பொதுச்சுடரேற்றி உறவுகள் அஞ்சலி


முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நிகழ்வுகள் நேற்றைய தினம் தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதில் வடக்கு மாகாண சபையினால் முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்ப ட்ட நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றதோடு, உயிரிழந்தவர்களது உறவுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் புரண்டு கதறியழுதனர்.

இலங்கை இராணுவத்தால் 2009 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் போராளிகள் என்போர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த கொடூரம் நடைபெற்று நேற்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில், அதற்கான நீதி இன்னமும் கிடைக்காமலே உள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நெடுந்துயர் நினைவு நிகழ்வுகள் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கிலும், புலம்பெயர் நாடுகளிலும் கடந்த ஆண்டுகளிலும் பார்க்க எழுச்சியுடன் அனுஷ்டி க்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபை, தமி ழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி,
யாழ்.பல்கலைக்கழகம், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியவற்றால் அனுஷ்டிக்கப்பட்ட நினைவு நிகழ்வுகளும், புலத்தில் லண்டன், கனடா, பிரான்ஸ், ஜேர் மன், இந்தியா ஆகிய நாடுகளில் அனுஷ்டி க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் ஒட்டு மொத்த தமிழினத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

வடக்கு மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பொது சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது, பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை.சேனாதிராஜா மலர் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,

பொதுமக்கள், மதத்தலைவர்கள், பொது அமைப்பினர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நினைவஞ்சலியின் போது அங்கு வருகை தந்திருந்த உயிரிழந்தவர்களின் உறவுகள், தமது உறவுகள் இங்கு தான் புதைக்கப்பட்டதாக கூறி அந்த முள்ளி வாய்க்கால் மண்ணில் புரண்டு அழுதமை அனைவரது கண்களையும் கலங்க வைத் தது.

எனது மகள், எனது மகன், எனது கணவன், எனது அம்மா இங்கு தான் புதைக்கப்பட்டார்கள், நாங்கள் இங்கேயே இருந்துவிடுவோம் வேறு எங்கும் போக வேண்டாம் என கதறியழுத போது வெளிநாட்டில் இருந்து வந்த ஊடகவியலாளர்களும் அவர்களது கதறலை கண்டு கண் கலங்கியதை காண முடிந்தது. நீதியே தொலைந்து விட்டதா? என்ற அவர்களது எல்லாம் தொலைத்த விரக்தி கண்ணீர் சிந்திய அவர்களது முகம்களில் தெரிந்தது.

தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் பிற்பகல் நான்கு மணிக்கு முள்ளி வாய்க்காலில் முள்ளிவாய்க்கால் படுகொலை அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு நடைபெற்றது இனப்படுகொலையே என அந்த நினைவு நிகழ்வின் போது வலியுறு த்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் பிரதான சுடரை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றி வைத்தார்.

பின்னர் உறவுகளை பறிகொடுத்த பொது மக்கள் தமது உறவுகள் நினைவாக சுடர்களை ஏற்றி அஞ்சலி செய்தனர். இதன் போதும், தமது உறவுகளை நினைத்து கதறியழுதார்கள். பின்னர் அஞ்சலி உரைகள் நடைபெற்றன. அஞ்சலி நிகழ்வுகள் முடிவுற்ற போதிலும், அந்த மண்ணில் இருந்து கடலை நோக்கி வெறித்து பார்த்த வண்ணம் சிலர் நேற்று முன்னிரவு வரை கடற்கரையில் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

இதேவேளை யாழ்.பல்கலையில் நேற்று முற்பகல் பத்து மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இலங்கை வரைபடத்தில் தனியாக அடையாளப்  படுத்தப்பட்டு, இன அழிப்பு நாள் என சுட்டிக் காட்டப்பட்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளின் போது ஆயிரக்கண க்கான மாணவர்கள் தமது சகோதரர்கள், பெற்றோர்கள் நினைவாக தீபங்களை ஏந்தியிருந்தனர். பின்னர் மாணவ தலைவர்களின் அஞ்சலி உரைகளும் நடைபெற்றன. 

மன்னாரில், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் காலை 11 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது யுத்தத்தில் படுகொலை செய்ய ப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலர் அஞ்சலி செலுத்துதல் மற்றும் தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.

முதலில் இறுதி யுத்தத்தின் போது தனது குடும்ப உறவுகள் அனைவரையும் இழந்த சந்திரசேகரன் பிருந்தா என்ற சிறுமி சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து இறுதி யுத்தத்தில் தனது கணவனை இழந்த கேதீஸ்வரன் பத்மினி என்ற பெண் நினைவிடத்துக்கு மலர் மாலை அணிவித்தார். கலந்து கொண்ட அனைவரும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியதோடு, மலர் அஞ்சலியும் செலுத்தினர். இதன் போது தமது உறவுகளை இழந்த உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் சர்வ மதத்தலைவர்களினால் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டன.

அதேபோல் கீரிமலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் ரி. துவாரகேஸ்வரனின் ஏற்பாட்டில் உயிரிழந்தவர்கள் நினைவாக பிதிர்க்கடன் செலுத்தும்  நிகழ்வும் நடைபெற்றது. இதன் போது உயிரிழந்த உறவுகள் நினைவாக விசேட பூஜைகள் நடைபெற்று, கீரிமலை கடலில் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நடைபெற்றது. இந்த பூசை வழிபாடுகளிலும் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகள் நினைவாக பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.

இவற்றை விட மட்டக்களப்பு வாகரையிலும், கிளிநொச்சி வட்டக்கச்சியிலும், திருகோணமலையிலும் நினைவு நிகழ்வுகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஏற்பாடு களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நினைவு நிகழ்வுகளில் பெரிதான குழப்பங்கள் ஏதும் ஏற்படாத போதிலும்,

அனைத்து நினைவஞ்சலி நிகழ்வுகளும் புலனாய்வு பிரிவினரின் விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. விசேடமாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சீருடை அணிந்த இராணுவத்தின் ரோந்து பணிகள் வழமைக்கு மாறாக இடம்பெற்றதை காண முடிந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தையும் நினைவு நிகழ்வின் போது வெளிப்படுத்தி இருந்தனர்.

நேற்று தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் நடைபெற்ற நினைவு நிகழ்வுகளில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி வேண்டும், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை ஒருமித்து வெளிப்படுத்தியிருந்ததனை அவதானிக்க முடிந்தது.

முள்ளிவாய்க்கால் அழிவை நினைத்து வாடிக்கொண்டு இருக்காமல், தமிழ் மக்கள் அனைவரும் தமக்கான நீதியை பெற்றுக் கொள்ள அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் எனவும், அந்த நகர்வு இராஜதந்திர ரீதியாக, ஜனநாயக ரீதியாக அமைந்தால் நிச்சயம் தமிழினம் மீண்டெழும் என்ற கோசம் அனைத்து நினைவு கூரல்களிலும் முன்வைக்கப்பட்டது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila