யாழ்ப்பாணத்திற்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டோ ஹாட்ரெம்மிற்கும் வடக்கு முதல்வருக்கும் இடையிலான சந்திப்பொன்று, கைதடியிலுள்ள வடக்கு முதல்வர் காரியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போதே, நோர்வே தூதுவரிடம் வடக்கு முதல்வர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பாதிக்கப்பட்டவர்களையும், பாதிப்பினை ஏற்படுத்தியவர்களையும் ஒருங்கிணைத்துப் பேசும் போதே, பாதிக்கப்பட்டவர்களின் மனோநிலையை அறிந்து, அவர்களின் வேண்டுகோள்களை ஆராய்ந்து, நல்லிணக்கத்தினைக் கொண்டு வர முடியுமென வடக்கு முதல்வர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல வருட காலமாக தமது வாழ்வாதாரத்திற்காக மயிலிட்டி மக்கள் காத்துக்கொண்டிருக்கும் போது, மயிலிட்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை கையளிக்க முடியாதென இராணுவ தளபதி கூறியதையும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இவற்றை செவிமடுத்து நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர், முடிந்தவரை இரு தரப்பினருக்கும் இடையில் சுமூகமான முறையில் நல்லிணக்கத்தினைக் கொண்டுவரக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்துள்ளார்.
அத்தோடு, சமஷ்டி குறித்து சிங்கள தலைவர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டினையும் நோர்வே பிரதிநிதிக்கு விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார். இவ்விடயம் தொடர்பாகவும், தாம் உரியவர்களுக்கு எடுத்துரைப்பதாக நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டோ ஹாட்ரெம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.