தமிழ் மக்களின் 30 வருட கால விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்பது போரின் மூலமாக இருந்திருக்கக் கூடாது.
அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருந்தால், இன்றைய இலங்கை என்பது உலக நாடுகளுக்கான உதாரணமாக இருந்திருக்கும்.
எனினும் துரதிர்ஷ்டவசமாக போரில் முடிந்து போனதால் இழப்புக்களும் துன்பங்களுமே எங்க ளுக்கானதாகி விட்டன. எனினும் இந்த இழப்புக்கள் ஓர் இனத்துக்கானது என்று யார் நினைத்தாலும் அது மிகப்பெரும் அநீதியாகும்.
மாறாக 2009இல் நடந்த இறுதிப்போர் என்பது இந்த நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பாக பார்க்கப்பட வேண்டும்.
வன்னி யுத்தத்தில் நடந்த அழிவுகளை தமிழினத்துக்கான அழிவாகக் கருதி சிங்கள மக்கள் மகிழ்வுறுவார்களாக இருந்தால், அவர்கள் பின்பற்றும் பெளத்த மதமும் புத்தபிரானின் போதனைகளும் தோற்றுவிட்டன என்றே சொல்ல வேண்டும்.
எனவே போரில் ஏற்பட்ட இழப்புகளுக்காக ஒட்டு மொத்த இலங்கை மக்களும் வருந்த வேண்டும்.
என்ன காரணத்துக்காக தமிழ் மக்கள் போராட வேண்டி இருந்ததோ அந்த விடயத்தை தீர்த்து வைத்து தமிழ் மக்களும் இந்த மண்ணில் நிம்மதியாக-சுதந்திரமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துவதே பொருத்தமானது.
இதைச் செய்யாமல் இலங்கையில் இன ஒற்றுமையை ஏற்படுத்துவோம் என்று யார் சபதம் செய்தாலும் அது ஒருபோதும் சாத்தியமாகாது என்பது உண்மை.
இந்த நாட்டில் இன்று தமிழர்கள் துன்பப்படுவது சிங்கள மக்களுக்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள் யுத்தம் நடத்தி தமிழ் மக்களை வதைத்தது மிகப்பெரும் கொடுமை என் பதை சிங்கள மக்கள் ஏற்றுத்தானாக வேண்டும்.
இதனால்தான் தோற்றவனை விட வென்றவனுக்கே அதிக துன்பம் என்று கெளதம புத்தபிரான் போதித்து அருளினார்.
ஆக, தமிழ் மக்கள் பட்ட துன்பங்களைகளைய வேண்டிய பெரும் பொறுப்பு சிங்கள மக்களுக்கு உண்டு.
இருந்தும் சிங்கள ஆட்சியாளர்களின் அனைத்து நகர்வுகளும் தமிழ் மக்கள் தங்கள் மீது மீண்டும் சினம் கொண்டு விடுவார்களோ என்ற நினைப்போடு நடப்பதைக் காணமுடிகின்றது.
தமிழர் தாயகத்திலும் சரி, இலங்கை நாட்டுக்கான சட்டவாக்கமாக இருந்தாலும் சரி தங்களின் நடவடிக்கைகள் தமிழர்களுக்கு ஒரு போதும் சாதகமாக இருக்கக்கூடாது என்பதுடன் அது தமிழர்களுக்கு பாதகமாகவே அமைய வேண்டும் என்பதிலும் ஆட்சியாளர்கள் உறுதியாக இருப்பது மிகப் பெரும் வேதனைக்குரியது.
தமிழர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பதாக இருந்தாலும் சரி; பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுப்பதாக இருந்தாலும் சரி எதிலும் ஒரு சிக்கலைத் தோற்றுவிப்பது அல்லது ஒரு உள்நோக்கத்துடன் செயற்படுவதாக இருப்பது இன ஒற்றுமையை ஒரு போதும் ஏற்படுத்த மாட்டாது.
எனவே இனவாதம் என்ற சிந்தனையை அடியோடு வேரறுத்து இலங்கை மக்கள்; இலங்கைத் திருநாடு; இது அனைவருக்கும் சொந்தம் என்ற நினைப்போடு செயற்படுவதே பொருத்துடையதாகும்.