யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பில் தென்பகுதி ஊடகங்களும் தென்பகுதி அரசியல்வாதிகள் சிலரும் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தனர்.
சிங்கள மாணவர் ஒருவர் பொல்லுடன் சண்டப்பிரசண்டமாக நிற்பதை ஊடகங்கள் வெளியிட்டபோது, அந்த மாணவனை தமிழ் மாணவனாக சிங்கள ஊடகங்கள் காட்டி நின்றமை மிகப் பெரும் அபத்தச் செயலாகும்.
தங்கள் இனம்சார்ந்த மாணவனின் கோலத்தை கண்டித்து ஒரு மாணவனுக்குரிய பண்பை வெளிப்படுத்த வேண்டிய ஊடகங்கள் தங்கள் இனத்து மாணவனை தமிழ் மாணவன் என்று சொல்லும் அளவில் இனப்பற்றுக் கூட தரம் கெட்டுப் போய்விட்டது என்பதை சொல்லித்தானாக வேண்டும்.
எது எப்படியாயினும் இந்த நாட்டில் இன்னமும் தர்மம் உயிர்வாழ்கிறது என்பதை களனி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கல்கத்த தர்மானந்த தேரர் தனது உயர்ந்த கருத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் பகுதியில் அமைந்துள்ளது. எனவே அங்கு தமிழ்ப் பண்பாடு-கலாசாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் எந்தத் தவறுமில்லை.
இது தவிர தமிழ் மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் மனநிலையை உணர்ந்து சிங்கள மக்கள் செயற்படவேண்டும்.
இந்த உண்மையை சிங்கள மாணவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். இப்புரிதலை சிங்கள மக்களே அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் சிங்கள மாணவர்கள் நடந்து கொள்ளக்கூடாது என பேராசிரியர் தர்மானந்த தேரர் குறிப்பிட்டிருப்பதானது இலங்கையில் இன ஒற்றுமை ஏற்படுவதற்கு இன்னமும் சாத்தியப்பாடு உண்டென்ற நம்பிக்கையைத் தந்துள்ளது.
உண்மையில் பேராசிரியர் தர்மானந்த தேரர் இந்தக் கருத்தைக் கூறியதன் மூலம் அக்கருத்து இரு வகைத் தகைமையை பெற்றுக் கொள்கின்றது.
அதாவது களனி பல்கலைக்கழகத்தின் சிங்கள பேராசிரியர் ஒருவரின் கருத்து என்பது ஒருவகை தகைமை. பெளத்த மத துறவியின் கருத்து என்பது இரண்டாவது தகைமை.
ஆக, இந்த இரு தகைமைக்குரியவரின் கருத்துக் குறித்து சிங்கள மாணவர்கள் மிகவும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
வடபுலத்து தமிழ் மக்கள் யுத்தத்தால் வெந்து போனவர்கள் என்பது உலகறிந்த உண்மை.
அன்புக்குரிய சிங்கள மாணவர்களே! நீங் கள் உண்மையான நல் உள்ளம் கொண்டவர்க ளாக இருந்தால் நிச்சயம் உங்களின் சக மாண வர்களான தமிழ் சகோதரர்களின் யுத்தகால துன்ப அனுபவிப்புகளைக் கேட்டு பகிர்ந்து அவ ற்றை உங்கள் ஊர்களிலும் முறையிட்டு;
நாங்கள் தமிழ் மக்களுக்குச் செய்தது அநீதி. அந்த மக்களை வாழ வைக்க வேண்டும் என்று கூறியிருப்பீர்கள்.
உங்கள் சக தமிழ் மாணவர்கள் யுத்தத்தில் தங்களின் பெற்றோரை, சகோதரர்களை, உறவுகளை இழந்த கதையைச் சொல்லும் போது இனி நீங்கள் நிச்சயம் அழுதிருப்பீர்கள்.
ஆனால் நீங்கள் பெளர்ணமி நாளை காத்திருந்து வெளிச்சக்கூடு கட்டினீர்கள். வரவேற்பு விழாவில் கண்டி நடனத்தை இடைச் செருகினீர்கள்.
இந்நிலையில்தான் பேராசிரியர் தர்மானந்த தேரர் உங்களுக்குப் போதனை செய்துள்ளார். இந்தப் போதனை புத்தபிரான் செய்த போதனைக்கு ஒப்பானது என்பது தம் தாழ்மையான கருத்து.
இதை ஏற்றுச் செயற்படுவீர்களாயின் சிங்கள மாணவர்கள்தான் எங்களின் உயர்ந்த நண்பர்கள் என்று தமிழ் மாணவர்கள் நிச்சயம் சொல்வர்.