இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கவனயீனமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கண்ணகைபுரம் கிராமம் விவசாயத்தை அடிப்படை வாழ்வாதார தொழிலாக கொண்டது.
குறித்த கிராமத்திலுள்ள மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் முட்கொம்பன், அக்கராயன் பகுதிகளுக்கு செல்வதற்கும், குறித்த பகுதியிலிருந்து மீள கிராமத்திற்கு செல்வதற்கும் வீதி இல்லாத நிலை காணப்படுகின்றது.
2012ம் ஆண்டுக்கு முன்னர் கண்ணகைபுரம் மக்கள் வெளியில் செல்வதற்காகவும், உட்செல்வதற்கும் காட்டுப் பாதை ஒன்றை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் 2012ம் ஆண்டு குறித்த பாதை பாதுகாப்பற்றதாக இருந்தமையினால், முட்கொம்பன்- கண்ணகைபுரம் இணைப்பு வீதி திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 2 கிலோ மீற்றர் நீளமான அந்த வீதியும் கவனிப்பாரற்ற நிலையினாலும், மேலதிக நெற் செய்கைகளினாலும் பாதிக்கப்பட்டு வெள்ளக்காடாக மாறியிருக்கின்றது.
இதேபோல் குறித்த கிராமத்து மக்கள் முன்னர் பயன்படுத்தி வந்த காட்டு வழி பாதையும் வெள்ளத்தினால் நிறைந்திருக்கும் நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கண்ணகைபுரம் கிரமத்தில் கண்ணகைபுரம் அ.த.க பாடசாலை ஒன்று அமைந்திருக்கின்றது.
இந்த பாடசாலையில் தரம் 5 வரையான வகுப்புக்களே நடக்கும் நிலையில் தரம் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் முட்கொம்பன் ப குதியில் உள்ள பாடசாலைக்கு அல்லது அக்கராயன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதனால் மாணவர்கள் வீதியில் உள்ள வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பற்ற முட்கொம்பன் - கண்ணகைபுரம் இணைப்பு வீதியையும், பழைய காட்டு வழி பாதையையுமே பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பாடசாலைக்கு செல்லும் போதும், மீள பாடசாலையில் இருந்து வீடு வரும்போதும் மாணவர்கள் புத்தக பைகளை தலையில் வைத்துக் கொண்டு, சப்பாத்து மற்றும் காலுறையை கழற்றி கையில் தூக்கிக் கொண்டு 2 கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல் விவசாயிகளும் விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக அக்கராயன், முட்கொம்பன் மற்றும் கிளிநொச்சி நகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லவேண்டிய தேவையுள்ளது.
விவசாயிகளும், மிகுந்த சிரமங்களுக்கும் மத்தியில் வெள்ளங்களுக்குள் நடந்து சென்றே விவசாய உற்பத்திகளை விற்பனை செய்கின்றனர்.
மேலும் இந்த கிராமத்திற்கான போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் அவசர தேவைக்காக நோயாளி ஒருவரை கொண்டு செல்வதற்கும் கூட 2 கிலோ மீற்றர் சகதியும், வெள்ளமும் நிறைந்த வீதியால் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வீதியை புனரமைத்து தருமாறு கமக்கார அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், பிரதேச சபை, கமநலசேவை திணைக்களம், மற்றும் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், அதற்கான தீர்வு இன்னமும் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது. இதனால் அடுத்த கட்டமாக இந்த விடயத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக மாகாண கல்வியமைச்சு இந்த விடயத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.