கிளிநொச்சியிலமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, அவர்களால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபிகளும் அகற்றப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்ற நகர அபிவிருத்தி தொடர்பான முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்தனர்.
இக்கூட்டத்தில், கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டுமெனவும், நகரத்தின் முக்கிய இடங்கள் பலவும் இராணுவத்தினர் வசம் உள்ளதாகவும், வளம்பொருந்திய மற்றும் பொருளாதரம் மிக்க இடங்கள், அழகான இடங்கள் அனைத்தும் இராணுவத்தினர் வசம் உள்ளதாகவும் இதனால் நகர அபிவிருத்திக்கு பாரிய இடைஞ்சலாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.