புதிய அரசியல்யாப்பு அமைக்கப்படவுள்ள நிலையில், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை தமிழர் தரப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், வடக்கு மக்கள் சமஷ்டி முறையிலான தீர்வு திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என, புதிய அரசியல்யாப்பு தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும், சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தெரிவித்திருந்தார்.
அவரது கருத்து தொடர்பில், மக்கள் கருத்தறியும் குழுவின் உறுப்பினரும், வடக்கு-கிழக்கு மக்களின் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கியவர் என்ற வகையிலும் எஸ்.தவராசாவிடம் தொடர்பு கொண்டு ஆதவன் செய்திப் பிரிவு வினவியது.
இதன்போது பதிலளித்த தவராசா, வடக்கு கிழக்கு மக்கள் சமஷ்டி முறையிலான ஆட்சியையே வலியுறுத்தியதாகவும், ஒரு சிலரது கருத்துக்கள் சமஷ்டி முறைக்கு மாற்றமானதாக இருந்தபோதும் பெரும்பான்மையான கருத்துக்கள் சமஷ்டியை வலியுறுத்தியதாகவும் குறித்த கருத்துக்கள் தெளிவான முறையில் ஆவணப்படுத்தப்பட்டள்ளதாகவும் தெரிவித்தார்.